search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைனர் சிறுவனை ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனு: அரியலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    மைனர் சிறுவனை ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனு: அரியலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

    போலீசாரால் பிடித்து செல்லப்பட்ட மைனர் சிறுவனை ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனு தொடர்பாக அரியலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
    சென்னை:

    அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரத்தான் கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.எம்.பாண்டியன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:

    என்னுடைய மூத்த மகன் பாரதி (வயது 16) கூலி வேலைக்கு சென்று வந்தான். கடந்த ஜனவரி 8-ந்தேதி டி.பழூர் போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்து, என் மகன் பாரதியை பிடித்து சென்றனர். அந்த போலீஸ் நிலையத்தில், சந்திரலேகா என்பவர் காணவில்லை என்று பதிவான வழக்கில், என் மகனை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது என் மகனை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்தனர். பின்னர் அணைக்குண்டம் கிராமத்துக்கு அழைத்து சென்று அங்கேயும் போலீசார் என் மகனை அடித்தார்கள்.

    கடந்த 10-ந்தேதி இரவு வரை என் மகன் போலீஸ் கட்டுப்பாட்டில் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டிருந்தான். அன்று இரவு டி.பழூர் போலீஸ் நிலையத்தில் என் மகன் இருந்ததை பார்த்தேன்.

    இந்த நிலையில், ஜனவரி 11-ந்தேதி காலை 10 மணிக்கு டி.பழூர் போலீசார் மீண்டும் என் வீட்டிற்கு வந்து, என் மகனை காணவில்லை என்று கூறினார்கள்.

    இதையடுத்து என் மகனை காணவில்லை என்று விக்கிரமங்கலம் போலீசில் உடனே புகார் செய்தேன். இதுவரை என் மகன் கண்டு பிடிக்கப்படவில்லை. என் மகனை போலீசார் பிடித்து சென்று அடித்து விசாரணை நடத்திய நிலையில், அவன் காணவில்லை என்று கூறுவதால், என் மகனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? என்று பயப்படுகிறேன்.

    விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்ததும், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் செய்தேன். இதுவரை என் புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில் காணாமல் போன சந்திரலேகா பெண்ணை போலீசார் கண்டு பிடித்துவிட்டனர். அவரை கடத்தியதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஆனால், என் மகன் பாரதி என்ன ஆனான்? என்பது மட்டும் இதுவரை தெரியவில்லை. எனவே, போலீசாரால் சட்ட விரோதமாக பிடித்து செல்லப்பட்ட என் மகனை இந்த ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தும்படி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, விக்கரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர், டி.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கலிய பெருமாள், அன்பழகன், தலைமை காவலர் மதி, மகேஷ், மோகன் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் செல்வரங்கன் ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்கும் படி அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×