search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சக்கட்ட குழப்பம் - தலையங்கம்
    X

    உச்சக்கட்ட குழப்பம் - தலையங்கம்

    தமிழக அரசியலிலும், ஆட்சி அமைப்பதிலும் தற்போது உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது.
    சென்னை:

    தமிழக அரசியலிலும், ஆட்சி அமைப்பதிலும் தற்போது உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது.

    கடந்த 5-ந்தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது.

    இதையடுத்து சசிகலாவுக்கு முதல்- அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மீதான தீர்ப்பு இன்னும் 1 வாரத்தில் வெளியாகும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.

    இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்ற கவர்னர் வித்யாசாகர் ராவ் புதிய முதல்-அமைச்சர் நியமிக்கப்படும் வரை முதல்- அமைச்சராக நீடிக்கும்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    முதல்-அமைச்சராக சசிகலா பதவி ஏற்பதற்கு சட்ட ரீதியாக தடை ஏதும் இல்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை காத்திருக்கலாம் என்ற தார்மீக கருத்து பொதுவாக எழுந்துள்ளது.

    எம்.எல்.ஏ.வாக இல்லாத ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்கும்போது அவர் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே தற்போதைய நிலையில் சட்டரீதியான பிரச்சனை எதுவும் சசிகலாவுக்கு இல்லை.

    அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு மீதான தீர்ப்புக்கு ஒருவாரம் காத்திருக்கும்படி நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை யாராலும் உறுதி செய்ய முடியாது. தீர்ப்பு சாதகமாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர் பதவி ஏற்ற பிறகு தீர்ப்பு பாதகமாக வந்தால் மீண்டும் வேறு முதல்வரை தேர்வு செய்ய வேண்டி வரும். காத்திருப்பதில் தவறில்லை என்பது சட்ட நிபுணர்களின் கருத்து.

    கவர்னர் வித்யாசாகர் ராவ் இந்த வி‌ஷயத்தில் சட்ட நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சசிகலாவை முதல்வராக முன்மொழிந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது சசிகலாவுக்கு எதிராக திரும்பியுள்ளார்.

    இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதையும் இனி பார்க்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சசிகலாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடர்ந்து தள்ளிப் போகிறது. இந்த குழப்பங்கள் எல்லாம் இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×