search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
    X

    ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

    பதவி விலகும்படி ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டாயத்தின்பேரில் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    அ.தி.மு.க.வில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிய சசிகலா நடராஜனும் அவரது குடும்பத்தினரும் இப்போது முதலமைச்சரையே மிரட்டி கடிதம் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக குடியரசு தின விழாவில் தனது மனைவியுடன் வந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத சசிகலா நடராஜன் முதலமைச்சரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளார் என்பதுதான் உண்மை. ஆனால் அந்தக் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், இன்றைக்கு மாநிலத்தில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டு நிலைத்த ஆட்சியின் சக்கரம் தடுமாறி நிற்கிறது.

    இன்றைக்கு முதலமைச்சரையே மிரட்டியிருக்கின்ற நிலையில், இந்த மிரட்டல் குறித்தும், போயஸ் கார்டனில் அமர்ந்து கொண்டு நிலைத்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வரே மிரட்டப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுப்பதை விட, இது குறித்து சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும்.

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மூன்று மாதங்கள், தேர்தலுக்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிப்பால் இரண்டரை மாதங்கள், அவர் மறைந்த பிறகு செயல்பட விடாத முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசால் இரண்டரை மாதங்கள் என்று ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு மேல் தமிழக அரசு நிர்வாகம் முழுவதும் செத்து விட்டது. நிர்வாக எந்திரம் நிலைகுலைந்து கிடக்கிறது.

    ஆகவே அசாதாரண சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில், பொறுப்பு ஆளுநர் உடனடியாக சென்னைக்கு வந்து முகாமிட்டு, தமிழக நலனை பாதுகாக்க நிலையான ஆட்சி அமைவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசியல் சட்டத்தை தமிழகத்தில் செயல்பட வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×