search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
    X

    முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

    சென்னை மாநகர போலீசார் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர். வழக்கத்தை விட அவர் வீடு முன்பு இன்று காலை அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் சென்னை அடையார் கிரீன்வெஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். அமைச்சராக இருந்த போது அவருக்கு சாதாரண போலீஸ் பாதுகாப்புதான் வழங்கப்பட்டிருந்தது.

    ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்-அமைச்சரானதும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

    என்றாலும் ஓ. பன்னீர் செல்வம் தலைமை செயலகத்துக்கும், மற்ற இடங்களுக்கும் செல்லும் போது போக்குவரத்தை நிறுத்தாமல் சென்று வந்தார். இந்த நிலையில் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால் அவரது பாதுகாப்பு குறைக்கப்படும் என்று கூறப்பட்டது.

    ஆனால் ஓ. பன்னீர் செல்வம் நேற்றிரவு திடீரென சசிகலாவை எதிர்த்து சரமாரியாக குற்றச்சாட்டுக்களை வெளியிட்டிருப்பதால் அரசியல் களம் மாறியுள்ளது. இதையடுத்து அனைவரது பார்வையும் ஓ. பன்னீர்செல்வம் மீது திரும்பியுள்ளது.

    இதனால் சென்னை மாநகர போலீசார் ஓ. பன்னீர் செல்வத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர். வழக்கத்தை விட அவர் வீடு முன்பு இன்று காலை அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க தலைமை நிலையம் உள்ள ராயப்பேட்டை பகுதியிலும் போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் விடுதியிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    இதற்கிடையே இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக மெரீனா கடற்கரையிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இது தவிர சென்னையின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×