search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் வருகை மீண்டும் ரத்து: மும்பையில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
    X

    கவர்னர் வருகை மீண்டும் ரத்து: மும்பையில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

    மும்பையில் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார். சட்ட நிபுணர்கள் கூறியதற்கு ஏற்ப செயல்பட அவர் முடிவு செய்துள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும் வகையில் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு நிரந்தரமான, முழுமையான கவர்னர் இல்லாதது பெரும் குறையாகக் கருதப்படுகிறது.

    தற்போது மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு கவர்னராகவும் உள்ளார். ஆனால் முக்கியமான நேரத்தில் அவர் இல்லாதது துரதிர்ஷ்டமாக உள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க. சட்டசபை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட போது ஊட்டியில் ஒரு விழாவில் பங்கேற்க கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்றிருந்தார். அவர் சென்னை வந்ததும் சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வித்யாசாகர் ராவ் சென்னை வரவில்லை. நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்று விட்டார்.

    திங்கட்கிழமை காலை டெல்லியில் மத்திய மந்திரி ஒருவரது குடும்பத்தின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்றிரவு அவர் சென்னை திரும்பி ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமாவை ஏற்று, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டது.

    ஆனால் அன்றும் வித்யாசாகர் ராவ் சென்னை வரவில்லை. டெல்லியில் இருந்து மும்பை சென்று விட்டார். இதைத் தொடர்ந்து அவர் நேற்று வருவார் என் றனர். நேற்றும் வரவில்லை.

    இந்த நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று (புதன்கிழமை) வருவார் என்று தகவல்கள் வெளியானது. இன்று பிற்பகல் அவர் வந்த பிறகு அவரை சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க கடிதம் கொடுப்பார் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது.

    ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்றும் வரவில்லை. அவரது சென்னை வருகை கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் கவர்னர் வித்யாசாகர் ராவை யோசிக்க வைத்துள்ளது. மேலும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருப்பதும் வித்யாசாகர் ராவ், விரைந்து செயல்பட இருப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.

    சசிகலாவுக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைத்தால் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்படுமா என்று அவர் இன்று காலை சட்ட நிபுணர்களுடன் மும்பையில் ஆலோசனை நடத்தினார். சட்ட நிபுணர்கள் கூறியதற்கு ஏற்ப செயல்பட அவர் முடிவு செய்துள்ளார்.

    இதனால்தான் வித்யாசாகர் ராவ் இன்றும் சென்னை வராமல் தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

    ‘‘கவர்னர் வித்யாசாகர் ராவ் எப்போது சென்னை செல்வார்?’’ என்று மராட்டிய மாநில கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள், ‘‘கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை செல்வாரா, டெல்லி செல்வாரா என்பது பற்றி எங்களுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை’’ என்றனர்.

    கவர்னர் வருகை மூன்றாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சசிகலா எப்போது பதவி ஏற்பார் என்பது உறுதி செய்யப்படாத ஒன்றாக உள்ளது. என்றாலும் அ.தி.மு.க. மூத்த அமைச்சர்கள் சிலர், சசிகலா பதவி ஏற்புக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    ஆனால் சசிகலா பதவி ஏற்பது எப்போது என்பது, கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்புவதை பொருத்தே இருக்கும். கவர்னர் அறிவித்த பிறகு சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் நாள், நேரம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு உயர் அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×