search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 314 பேர் மீது வழக்கு
    X

    திருத்துறைப்பூண்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 314 பேர் மீது வழக்கு

    திருத்துறைப்பூண்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 314 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா மாவட்டங்களின் கடைமடைப்பகுதி ஆகும். இந்தப் பகுதி முழுக்கமுழுக்க விவசாயத்தை நம்பி உள்ளது. கர்நாடகாவிலிருந்து பாசனத்துக்கு உரிய நேரத்தில் காவிரி தண்ணீர் திறக்காததாலும் பருவமழை உரிய நேரத்தில் பெய்யாததாலும் விவசாயிகள் கடுமையான வறட்சியில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குளம், வாய்க்கால், ஏரிகள் வற்றிப்போய் ஆடு மாடுகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 2017-ஆம் ஆண்டிற்கான வறட்சி நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். 100-நாள் வேலைத்திட்டத்தை நகர்புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும். 2015-2016-ஆம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்கவேண்டும். நகரில் அனைத்து வார்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கி மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 5 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

    நகரசெயலாளர் கே.கோபு தலைமையில் புதிய பேருந்து நிலையத்திலும், ஆலத்தம்பாடி கடைத் தெருவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையிலும், பள்ளங் கோவில் கடைத்தெருவில் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கதிரேசன் தலைமையிலும், பாமணி கடைத்தெருவில் ஒன்றியக்குழு உறுப்பினர் வீராச்சாமி தலைமையிலும், கட்டிமேடு கடைத்தெருவில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமையிலும் சாலைமறியல் நடைபெற்றது.

    இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த 314 பேர் மீது திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜ்குமார், வீரப்பரஞ்சோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×