search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபை வரலாற்றில் புதிய அணுகுமுறை: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியில் முதல்வருடன் ஸ்டாலின் பங்கேற்பு
    X

    சட்டசபை வரலாற்றில் புதிய அணுகுமுறை: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியில் முதல்வருடன் ஸ்டாலின் பங்கேற்பு

    தலைமை செயலகத்தில் இன்று நடந்த தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தி.மு.க.வின் இந்த அரசியல் நாகரீகத்தால் தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே புதிய அணுகுமுறை உருவாகத் தொடங்கியுள்ளது.
    சென்னை:

    தலைமை செயலகத்தில் இன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக சுமார் 30 நிமிட நேரம் சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி 10.45 மணி முதல் 11.15 மணி வரை சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

    இதைத் தொடர்ந்து சட்டசபையில் பங்கேற்றிருந்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்த தலைமை செயலகம் பின்புறம் உள்ள ராணுவ மைதானத்துக்கு சென்றனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்றனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருங்கே கலந்து கொண்டனர். ஒன்றாக உறுதிமொழி எடுத்தனர்.

    முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி விட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். அப்போது அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் அதை திரும்ப சொல்லி உறுதி ஏற்றனர்.

    அங்கு நடந்த போலீஸ் அணிவகுப்பு மரியாதையையும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டார்.



    வழக்கமாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சிகள் சேர மாட்டார்கள். கடந்த காலங்களில் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் உறுதி மொழி ஏற்பு நடத்தும் போது தி.மு.க. அதில் பங்கேற்றதில்லை.

    ஆனால் சட்டசபை வரலாற்றில் இன்று முதன் முதலாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றனர். இது தமிழக அரசியலில் தி.மு.க. கடைபிடிக்கும் நாகரீகமாக பாராட்டைப் பெற்றுள்ளது. தி.மு.க.வின் இந்த அரசியல் நாகரீகத்தால் தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே புதிய அணுகுமுறை உருவாகத் தொடங்கியுள்ளது.
    Next Story
    ×