search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு கடத்துவதற்காக போதைப்பொருள் பதுக்கிய 2 பேருக்கு 10 ஆண்டு சிறை
    X

    இலங்கைக்கு கடத்துவதற்காக போதைப்பொருள் பதுக்கிய 2 பேருக்கு 10 ஆண்டு சிறை

    இலங்கைக்கு கடத்துவதற்காக ஹெராயின் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்ததாக பதிவு செய்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    சென்னை:

    பூந்தமல்லி, மல்லியம் நரசிம்மன்நகரில் ஒரு வீட்டில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக ‘ஹெராயின்’ போதைப் பொருளை சிலர் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார், கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி அந்த வீட்டை சோதனை நடத்தினார்கள்.

    அந்த வீட்டில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்காக 84 ‘டப்பாக்களில்’ உயிருடன் மீன்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ‘டப்பாக்களை’ போலீசார் சோதனை செய்தனர். மீன்கள் உள்ள தண்ணீருக்குள் ‘பாலித்தீன் கவர்களில்’ மர்ம பொருள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.

    அவற்றை பிரித்து பார்த்தபோது, ‘ஹெராயின்’ போதைப் பொருள் 17 கிலோ இருந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த டி.வி. பெட்டியை போலீஸ்காரர்கள் சோதனை நடத்தியபோது, அதில் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது.

    இதையடுத்து அந்த வீட்டில் இருந்த மயிலேறும்பெருமாள் (வயது 24), முகமது ராசிக்(36), அவரது தந்தை முகமது சுல்தான் ராசிக்(63) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்படி, பாரதி(29) என்பவரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இந்த போதைப்பொருளை நூதன முறையில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவர் மீதும் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்

    இந்த வழக்கு, சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் தாமல் கண்ணா ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்டீன் டேவிட் அளித்த தீர்ப்பில், ‘முகமது சுல்தான் ராசிக், பாரதி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர்களை விடுதலை செய்கிறேன். மயிலேறும் பெருமாள், முகமது ராசிக் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.

    Next Story
    ×