search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் திறக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    தண்ணீர் திறக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    அமராவதி அணையில் இருந்து பள்ளபாளையம் வரை தண்ணீர் திறந்து விடக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    க.பரமத்தி:

    கரூரை அடுத்த செல்லாண்டிபாளையம், பள்ளபாளையம், தாதம்பாளையம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு ஒன்று கூடி காலிக்குடங்களுடன் கரூர்–தாராபுரம் சாலை செல்லாண்டிபாளையம் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில்

    இந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் விவசாய பயிர்கள் முழுவதும் காய்ந்து போய் விட்டது. இந்த நிலையில் எங்கள் பகுதியில் தற்போது அதிக அளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதாவது ஆழ் குழாய் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லைக்கு கூட வரவில்லை. எனவே குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். அதாவது பள்ளபாளையம் வரை வரும் அளவில் தண்ணீர் திறக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காகவே சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அமராவதி ஆற்று பாசன என்ஜினீயர்கள் சரவணன், புகழேந்தி, தாசில்தார் அம்பாயிரநாதன், போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் காலை 10 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் கரூர்–தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
    Next Story
    ×