search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினா கலவரத்தில் கைதான 25 பேர் ஜாமீன் கேட்டு மனு
    X

    மெரினா கலவரத்தில் கைதான 25 பேர் ஜாமீன் கேட்டு மனு

    மெரினா கலவரத்தில் கைதான 25 பேரும் ஜாமீன் வழங்க கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடந்துவதற்கு ஏதுவாக அவசர சட்டத்தை கொண்டு வந்தது.

    இதன்பின்னரும், போராட்டத்தை கைவிட மறுத்த போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட புதிய கோரிக்கைகளை முன் வைத்தனர். போராட்டக் களத்தில் இருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில், போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பொதுச் சொத்துக்கள் தீ வைத்தும், அடித்து நொறுக்கியும் நாசப்படுத்தப்பட்டன.

    இதுகுறித்து சென்னையில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் சுகுமாரன் உட்பட 25 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கைதான 25 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதி நசீர்அகமது முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘மனுதாரர்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று கூறி வாதிட்டார்கள்.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை தள்ளி வைத்தார்.

    Next Story
    ×