search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  ஜெயலலிதா தனது வாழ்க்கையில் எதிலுமே நம்பர் 1 தான்: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்
  X

  ஜெயலலிதா தனது வாழ்க்கையில் எதிலுமே நம்பர் 1 தான்: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

  “ஜெயலலிதா தனது வாழ்க்கையில் எதிலுமே ‘நம்பர் 1’ தான்” என்று சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.
  சென்னை:

  “ஜெயலலிதா தனது வாழ்க்கையில் எதிலுமே ‘நம்பர் 1’ தான்” என்று சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.

  சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நேற்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

  கடந்த டிசம்பர் மாதம் 5-ம் நாள், தமிழ்நாட்டின் இருண்ட நாள். நம்மையும், உலகெங்கும் உள்ள தமிழர்களையும் நிலைகுலையச் செய்த நாள். அன்றுதான், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்த, ஜெயலலிதா நம்மை விட்டுப் பிரிந்தார். ஜெயலலிதா இப்பூவுலகைவிட்டு மறைந்தபோதிலும், நமது இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம்மையெல்லாம் வழி நடத்திக்கொண்டிருக்கிறார்.

  தன்னுடைய பேச்சாற்றலால், எழுச்சிமிகு திட்டங்களால், மக்களை அணுகும் பாங்கால், அளப்பரிய திறமையால், ஓய்வறியா உழைப்பால், தனது கட்சியைச் சேர்ந்தவர்களால் மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடைய பேரன்பினையும், போற்றுதலையும், பாராட்டினையும் ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா. தனது தன்னம்பிக்கையினால், ஆளுமைத் திறத்தால், நெஞ்சுறுதியால், துணிச்சலால், எதிரியும் தன்னை மதிக்கத்தக்க அளவிற்கு, பாராட்டத்தக்க அளவிற்கு, புகழத்தக்க அளவிற்கு தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஜெயலலிதா.

  ஜெயலலிதாவை பொறுத்தவரையில், சோதனைகளை கடந்து சாதனைகளை படைத்தவர். சவால்களை வெற்றி கண்டு சரித்திரம் படைத்தவர். ஜெயலலிதா தனது வாழ்க்கையில் எதிலுமே, எப்பொழுதுமே, நம்பர் 1 தான். படிப்பில், நாட்டியத்தில், திரையுலகில், அரசியலில் என அனைத்திலும் ஜெயலலிதா நம்பர் 1 தான்.

  அனைத்திலும் நம்பர் 1 ஆக இருந்த ஜெயலலிதா, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாகவே ஆக்க விரும்பி, அதை செயல்படுத்தியும் காட்டினார். காவிரி நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தியது, தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்கியது, புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்து சென்னைவாழ் மக்களின் குடிநீர் ஆதாரத்தை உறுதி செய்தது, விலையில்லா அரிசியை வழங்கியது, கட்டணமில்லாக் கல்வியை உறுதி செய்தது என ஆயிரக்கணக்கான திட்டங்களுக்குச் சொந்தக்காரர் ஜெயலலிதா.

  அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தை சிந்திக்கக் கூடிய அரசியல் மேதையாக வாழ்ந்து, தன் வாழ்நாளையே இந்த நாட்டிற்காக அர்ப்பணித்த மாமேதை ஜெயலலிதா. அவரது மறைவிற்கு, இரங்கல் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

  “அகிலத்தின் அகல் விளக்காய்; தியாகத்தின் திருவிளக்காய்; ஒளி தரும் தீபமாய்; மனிதாபிமானத்தின் மறுஉருவமாய்; மனிதநேயத்தின் இலக்கணமாய்; காவிரியை மீட்டு வந்த பொன்னியின் செல்வியாய்; தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைவியாய்; 8½ கோடி தமிழ் மக்களின் ஏந்தலாய்; பன்மொழிப் புலவராய்; பல்கலை வித்தகராய்; கல்விக்கு கணினி, உயிர் காக்க காப்பீடு, கழனிக்கு காவேரி, உலைக்கு அரிசி, தமிழக உயர்வுக்கு ஆலை என அனைத்தையும் தந்து, ஈடில்லா மாநிலமாய் தமிழகத்தை உயர்த்திட்ட வான் மழை மேகமாய்; தமிழ் மக்களின் தாயாய்; தமிழ் மொழியின் பாதுகாவலராய்; தமிழ்நாட்டின் தவப்பெரும் புதல்வியாய்; ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்ற தத்துவத்தையே வாழ்க்கையாய் அமைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தொண்டாற்றி, இறுதிவரையில் தனக்கென வாழாமல் பிறருக்குரியவராக வாழ்ந்தவரும், அனைவரின் அன்பிற்கும், போற்றுதலுக்கும் உரியவராகவும், மாபெரும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும் பணியாற்றிய ஜெயலலிதா யாரும் எதிர்பாராத வகையில் மறைந்தமை குறித்து இப்பேரவை, தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், ஆற்றொணாத் துயரத்தையும் தெரிவிப்பதோடு, தங்கநிகர் தாயின் மறைவால் வருந்தும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது”.

  இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

  இறுதியாக, சபாநாயகர் ப.தனபால் பேசியதாவது:-

  ஜெயலலிதாவால் எனக்கு வழங்கப்பட்ட இந்தப் பதவி குறித்து எத்தனையோ நேரங்களில் நான் பெருமைப்பட்டுள்ளேன். இன்றைய தினம், துரதிருஷ்டவசமாக, இந்த இரங்கல் தீர்மானத்தின் மீது உரையாற்றும் இந்த தருணத்தை நினைத்து மிகுந்த வேதனைப்படுகிறேன், துன்பப்படுகிறேன்.

  என்னுடைய வாழ்நாளில் எனக்கு கிடைத்த துர்பாக்கியமாகவே இதனைக் கருதுகிறேன், வேதனையில் துடிக்கிறேன். வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன.

  சிறந்த ஒரு முதல்-அமைச்சரை மிக உயர்ந்த செயல்பாடுடைய உறுப்பினரை பெற்றதற்காக இந்தப் பேரவை நிச்சயமாகப் பெருமைப்படுகிறது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. இத்தகைய மாமனிதர் மறைவுற்றுள்ளார்.

  அவர் மறைவுற்றார் என்ற துன்பச் செய்தியை தமிழகம் கேட்டவுடன், இந்த இருண்டு சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்று கட்சி பாகுபாடு இல்லாமல் வருத்தம் அடைந்தனர். தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு பெரும் இழப்பாகும் ஜெயலலிதாவின் மறைவு. ஜெயலலிதாவின் மறைவால் வருந்தும் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ஜெயலலிதாவின் கனவுகள் நனவாகி ஒளி வீச அயராது உழைப்போம். அதுதான் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்துகின்ற அஞ்சலி. அது தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி பெறுவதற்கான வழி.

  இவ்வாறு அவர் பேசினார். 
  Next Story
  ×