search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை வறண்டு கிடப்பதையும், குட்டைபோல் தண்ணீர் இருப்பதையும் படத்தில் காணலாம்
    X
    மேட்டூர் அணை வறண்டு கிடப்பதையும், குட்டைபோல் தண்ணீர் இருப்பதையும் படத்தில் காணலாம்

    தமிழகம் முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

    தமிழகம் முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மழை பொய்த்துப் போனதால் தற்போது தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகள் வறண்டு விட்டன.
    சென்னை:

    தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பருவ மழைகள் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை.

    தமிழகத்துக்கு அதிக மழையைப் பெற்றுத் தரும் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் இறுதி வரை 63 சதவீதம் அளவுக்கே பெய்துள்ளது.

    பருவ மழைகள் கை கொடுக்காததால் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வறட்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கமும், பாதிப்பும் இன்னும் இரு வாரங்களில் எதிரொலிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மழை இல்லாத காரணத்தால் நீர்ப்பாசனம் முடங்கி விவசாயம் சுத்தமாக இல்லாமல் சுருண்டு விட்டது. தமிழக விவசாயிகள் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.

    இந்த இழப்பை ஈடுகட்ட தமிழக அரசு தற்போது ஆய்வில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசு இழப்பீடு வழங்கினாலும் விவசாயிகள் வாழ்வில் ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    விவசாயத்துக்கு அடுத்தபடியாக மக்களின் முக்கிய தேவையான குடிநீருக்கும் தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மழை பொய்த்துப் போனதால் தற்போது தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகள் வறண்டு விட்டதே இதற்கு காரணமாகும். இந்த அணைகளில் தற்போது வெறும் 13 சதவீதம் அளவுக்கே தண்ணீர் உள்ளது.

    குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள வைகை, பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளிலும் தண்ணீர் சுத்தமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வைகையில் 4 சதவீத தண்ணீர் இருப்பே உள்ளது. இந்த தண்ணீர் 10 நாட்களுக்கு தேவையான குடிநீரையே சப்ளை செய்ய முடியும்.


    பாபநாசம் அணை வறண்டு கிடப்பதை படத்தில் காணலாம்

    வைகை அணையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களும் கடும் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தணிப்பதில் வற்றாத ஜீவநதியாக கருதப்படும் தாமிரபரணியே முதுகெலும்பாக உள்ளது. ஆனால் பாபநாசம் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 40 நாட்களுக்கே போதுமானதாக உள்ளது. அது போல மணிமுத்தாறில் உள்ள தண்ணீரும் 40 நாள் குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது.

    எனவே இன்னும் ஒரு மாதம் கழித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் குடி தண்ணீருக்கு குடத்தை தூக்கிக் கொண்டு அலைய வேண்டிய அபாயம் உருவாகி வருகிறது. இதே அபாய நிலையே கோவை நகருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கோவை மக்களின் தாகத்தைத் தீர்க்கும் சிறுவாணி அணையில் இன்னும் ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீரே இருப்பு உள்ளது.

    வட மாவட்டங்களில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு சாத்தனூர் அணை தண்ணீர் குடிநீர் தேவையை தீர்த்து வருகிறது. தற்போது சாத்தனூர் அணையில் 36 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை வைத்து இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே குடிதண்ணீர் வழங்க முடியும்.

    சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் குடிநீர் தேவையை மேட்டூர் அணை நிறைவு செய்து வருகிறது. அதாவது மேட்டூர் அணை தண்ணீரை நம்பி 127 குடிநீர் திட்டங்கள் இந்த 10 மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது. இந்த குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 1050 மில்லியன் தண்ணீர் தேவைப்படுகிறது.

    மேட்டூர் அணையில் தற்போது 11 சதவீதம் தண்ணீரே உள்ளது. இந்த குறைந்த அளவு தண்ணீரை வைத்து 80 நாட்களுக்கு 10 மாவட்டங்களிலும் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    முல்லைப் பெரியாறில், உள்ள தண்ணீர் இன்னும் ஒரு மாத குடிநீர் தேவையையும் அமராவதி அணை தண்ணீர் இன்னும் 2 மாதத்துக்கும் குடிநீர் தேவையை சமாளிக்கப் போதும் என்று தெரிய வந்துள்ளது. பிப்ரவரி இறுதியில் இருந்து இந்த அணைகளும் குடிநீர் தேவைக்கு கைகொடுக்காது.

    தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. எனவே சென்னை மக்களுக்கு ஏரிகளில் ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீரே உள்ளது.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் குடிநீர் சப்ளை அளவு குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டின் 46 ஆயிரத்து 438 உள்ளாட்சி அமைப்புகளில் 83 சதவீதமாக தண்ணீர் சப்ளை குறைக்கப்பட்டுள்ளது. அதை மேலும் குறைத்து 60 சதவீதமாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி 528 டவுன் பஞ்சாயத்துக்களில் பிப்ரவரி இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படாது என்ற நிலை உள்ளது. ஆனால் 350 டவுன் பஞ்சாயத்துக்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது.

    எனவே ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.172 கோடி செலவில் திட்டங்களை தொடங்கியுள்ளது.

    என்றாலும் இந்த மாத இறுதியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகள் குடிநீர் தட்டுப்பாடு பிடியில் சிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×