search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஓட்டேரி ஏரியில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி கிடக்கும் காட்சி
    X
    வேலூர் ஓட்டேரி ஏரியில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி கிடக்கும் காட்சி

    வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 700 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டது

    வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 700 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டது. மழை இல்லாததால் பயிர்கள் கருகி விட்டன.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாலாற்றில் தண்ணீர் கரை புரண்டோடியது. இதனால் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரி, சதுப்பேரி ஏரி, ஓட்டேரி ஏரி உள்பட 519 ஏரிகளும் நிரம்பின.

    மோர்தானா அணை, ஆண்டியப்பனுர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்து போனது, வார்தா புயல் வந்த போது மட்டுமே மாவட்டம் முழுவதும் சராசரியாக 10 செ.மீ மழை பெய்தது.

    பருவ மழை பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள 400 ஏரிகள் வறண்டுவிட்டன. விவசாயத்துக்கு தண்ணீர் திறக்காத 80 ஏரிகளில் முழு கொள்ளவு நீர் உள்ளது. 12 ஏரிகளில் 70 சதவீதம், 30 ஏரிகளில் 50 சதவீத அளவுக்கு தண்ணீர் உள்ளது.

    37.72 அடி கொண்ட மோர்தானா அணையில் 31.3 அடி தண்ணீர் உள்ளது. 26.2. அடி கொண்ட ஆண்டியப்பனுர் அணையில் 13.9 அடியும், 24.5 அடி கொண்ட 4.7 அடி தண்ணீரும் உள்ளது. இந்த அணைகளில் தற்போது வேகமாக நீர் இருப்பு குறைந்து வருகிறது. நீர்வரத்து இல்லாததால் அணைகள் திறக்கபடவில்லை.

    வேலூர் மேற்கு மாவட்ட பகுதிகளில் பருத்தி, நிலக்கடலை பல ஆயிரம் ஏக்கரில் நடவு செய்திருந்தனர்.

    மழை இல்லாததால் இந்த பயிர்கள் கருகி விட்டன. வார்தா புயல் காற்றில் பேரணாம்பட்டு, கந்திலி, குடியாத்தம், வாணியம்பாடி, காவேரிப்பாக்கம் பகுதியில் லட்சக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை நம்பியே பெரும்பாலான இடங்களில் விவசாயம் நடக்கிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    கிணறுகளில் தண்ணீர் இல்லை. ஆயிரம் அடிக்கு மேல் போர்வெல் அமைத்தால் தண்ணீர் வருவதில்லை. இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்:-

    வேலூர் மாவட்டம் தற்போது கடும் வறட்சியில் தள்ளப்பட்டுள்ளது. மானாவாரி பயிர்கள் எதுவும் பயிரிட முடியவில்லை. விவசாயிகள் வெறுங்கையுடன் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் டெல்டா விவசாயிகளை பற்றியும் காவிரி பற்றி மட்டுமே பேசுகிறார்கள். பாலாறு, தென்பெண்ணை ஆற்று விவசாயிகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

    நிலத்தடி நீர் மட்டத்தை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். இங்கு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டது. பாலாறு தென்பெண்ணை ஆறுகளை இணைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    வேலூர் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் அளித்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலாறு, ஏரிகள், வறண்டு போனதால் வேலூர் மாவட்டம் முழுவதும் இன்னும் 2 மாதங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படும். குடியாத்தத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குடிநீர் கேட்டு மறியல் செய்தனர். மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரிவாக்கம் செய்து குடிநீர் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை 119அடி உயரம் கொண்டது. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 91.40 அடியாக இருந்தது. அதாவது 2 ஆயிரத்து 613 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    கடந்த காலங்களில் போதிய மழை இல்லாததால், அணையிலிருந்து 2013-ல் 18 நாட்களும் 2014-ல் 23 நாட்களும் 2015-ம் ஆண்டு 10 நாட்களும் மட்டுமே பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதே நேரத்தில் 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை அதி களவில் பெய்ததால் அணை முழுவதும் நிரம்பியது. இதனால் காரணமாக 2016-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி முதல் மே மாதம் 22-ந்தேதி வரை 3 கட்டங்களாக மொத்தம் 90 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடைமடை வரை நீர் சென்று விளைச்சல் நன்றாக இருந்தது.

    ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத நிலையில், இப்போதைய நிலவரப்படி வரும் பிப்ரவரி மாதத்தில் பாசனத்துக்காக எவ்வளவு நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்தது.

    ஏனெனில் அணையின் அடிப்படை தேவைகளுக்காக, போதிய நீர் கையிருப்பாக வைக்கப்படும். இதன்படி, அணை பகுதியில் உளள குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் பூங்கா பராமரிப்பு, மீன்வளர்ப்பு, ஆகியவற்றுக்காக 307 மில்லியன் கன அடி நீரும், திருவண்ணாமலை நகராட்சி, தானிப்பாடி, புதுப்பாளையம், சாத்தனூர் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக 322 மில்லியன் கன அடி நீரும் சேமிப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

    இப்போதுள்ள தண்ணீர் இருப்பை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு குறைந்த நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் விவசாயம் பொய்த்துப் போகும் நிலையில் உள்ளது. இப்போதைய நிலவரப்படி விளைச்சல் குறைவால் அரிசி விலை கிடுகிடுவென உயரும் என்ற அச்சமும் நிலவுகிறது.

    இதேபோல் 22 அடி கொள்ளளவு கொண்ட மிருகண்டா அணையில் 2.9 அடி தண்ணீரும், 62 அடி உயரம் உள்ள செண்பகதோப்பு அணையில் 39 அடி தண்ணீரும், 59 அடி கொள்ளளவு கொண்ட குப்பநத்தம் அணையில் 31 அடி தண்ணீர் உள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட ஏரிகளில் 300 ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டே கிடக்கிறது. மீதமுள்ள 300 ஏரிகளில் குறைந்தளவில் தண்ணீர் உள்ளது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள 71 ஆயிரத்து 873 ஏக்கர் விலை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நெல் மற்றும் பயிர்கள் கருகிய நிலையில் உள்ளது. குடிதண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும் அபாயம் உள்ளது.




    Next Story
    ×