search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபால்துறை வங்கிகள் மார்ச் இறுதியில் செயல்பாட்டுக்கு வருகிறது
    X

    தபால்துறை வங்கிகள் மார்ச் இறுதியில் செயல்பாட்டுக்கு வருகிறது

    தபால்துறை வங்கிகள் மார்ச் இறுதியில் செயல்பாட்டுக்கு வருகிறது என்றும், சென்னையில் அஞ்சல் தலை கண்காட்சி இன்று தொடங்குகிறது என்றும் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் கூறினார்.
    சென்னை:

    தபால்துறை வங்கிகள் மார்ச் இறுதியில் செயல்பாட்டுக்கு வருகிறது என்றும், சென்னையில் அஞ்சல் தலை கண்காட்சி இன்று தொடங்குகிறது என்றும் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் கூறினார்.

    இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு அஞ்சல்தலை கண்காட்சி-2017 சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கம் சமுதாய மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சி சென்னையில் 1997-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது 20 ஆண்டுகள் கழித்து நடக்கிறது.

    இதில் 450 காட்சி பலகைகள் இடம்பெறுகின்றன. பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான கண்காட்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    கண்காட்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக ‘கடித கண்காட்சி’ இடம் பெறுகிறது. இதில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் முன்னணி தமிழ் நடிகர், நடிகைகள் எழுதிய கடிதங்கள் இடம்பெறுகின்றன.

    மேலும் சிறப்பு தபால் உறைகளும் வெளியிடப்படுகின்றன. இதில் தமிழக பாரம்பரிய பட்டு சேலைகள், திருவாரூர் கோவில் தேர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் போன்றவர்களின் உருவப்படங்கள் இடம் பெறுகிறது. இதுதவிர திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், முட்டம் கலங்கரை விளக்கம், மணப்பாடு கலங்கரை விளக்கம் ஆகிய 3 நிரந்தர உருவக அஞ்சல் முத்திரைகளும் வெளியிடப்படுகின்றன.

    பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் சென்னை பார்க் டவுன் கிளையில் மட்டும் 66 மணியார்டர்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை 10 ரூபாய் நாணயங்கள் மூலம் பட்டுவாடா செய்ய முடிவு எடுத்துள்ளோம். மணியார்டர்கள், முதியோர் ஓய்வூதியம் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.362 கோடிக்கு செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தபால் அலுவலகங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளன. ரூ.2 ஆயிரத்து 577 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் தபால் அலுவலக கணக்குகளில் ‘டெபாசிட்’ செய்யப்பட்டுள்ளன.

    இதுவரை 97 தபால் ஏ.டி.எம்.கள் சோதனை முறையில் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப ரீதியாக வெற்றி அடைந்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தவில்லை. இதுவரை 1 லட்சம் ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாத இறுதிக்குள் மேலும் 1 லட்சம் ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்படும்.

    இந்த ஏ.டி.எம். அட்டைகள் மூலம் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். விரைவில் அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணத்தை எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் இறுதியில் தபால்துறை வங்கிகள் செயல்பாட்டுக்கு வரும். அதன் பிறகு, தபால்துறை வங்கி நேரடியாக ரிசர்வ் வங்கியுடன் தொடர்பு கொண்டு பண பரிமாற்றத்தில் ஈடுபட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சென்னை வட்ட அஞ்சல் துறை தலைவர் ராதிகா சக்கரவர்த்தி, அஞ்சல்துறை தலைவர் (தபால் மற்றும் வணிக வளர்ச்சி) ஜெ.டி.வெங்கடேஷ்வரலு ஆகியோர் உடன் இருந்தனர். 
    Next Story
    ×