search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமைச் செயலாளர் அறையில் கைப்பற்றப்பட்ட இரு செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது
    X

    தலைமைச் செயலாளர் அறையில் கைப்பற்றப்பட்ட இரு செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது

    தலைமை செயலாளர் அறையில் கைப்பற்றப்பட்ட இரு செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது என்று வருமானவரி புலனாய்வுத்துறை தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அவருடைய மகன் விவேக் மற்றும் உறவினர்கள், நண்பர் வக்கீல் அமலநாதன் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி துறையினர் சோதனை செய்து கணக்கில் காட்டப்படாத பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக ராமமோகன ராவின் மகன் விவேக்கிற்கு வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதேபோல் ராமமோகன ராவ் மற்றும் வக்கீல் அமலநாதன் ஆகியோரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறப்பட்டது. வக்கீல் அமலநாதன் வருமானவரி புலனாய்வு பிரிவில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் விசாரணை நடைபெற்றது.

    ஆனால் விவேக் விசாரணைக்கு வருவதற்கு மேலும் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வருமான வரி அதிகாரிகளிடம் கோரி உள்ளார். இதனை வருமான வரித்துறை ஏற்கவில்லை. ஆஜராகாமல் இருக்கும் விவேக் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வருமானவரித்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதனை அறிந்த விவேக், தன்னை கைது செய்துவிடாமல் இருப்பதற்காக தன்னுடைய வக்கீல்கள் மூலம் முன்ஜாமீன் பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு ராமமோகன ராவும் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று வக்கீல் மற்றும் ஆடிட்டர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு நள்ளிரவு வீடு திரும்பியது குறித்தும் வருமானவரி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேற்று அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில் தலைமை செயலாளர் அறையில் கைப்பற்றப்பட்ட இரு செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது என்று வருமானவரி புலனாய்வுத்துறை தெரிவித்து உள்ளது. விசாரணைக்கு இன்னும் விவேக் ஆஜராகாததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டு உள்ளது, தொடர்ந்து 7-வது நாளாக அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரி புலனாய்வுத்துறை தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×