search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.34 கோடி பணம் மாற்றிய வழக்கில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் கைது
    X

    ரூ.34 கோடி பணம் மாற்றிய வழக்கில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் கைது

    ரூ.34 கோடி புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிய வழக்கில், சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையை சேர்ந்தவர் சேகர் ரெட்டி. இவர் மத்திய-மாநில அரசுகளின் காண்டிராக்டர் ஆவார். மணல் குவாரி காண்டிராக்ட் தொழிலும் செய்கிறார். இவரது வீட்டில் கடந்த 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இவரது கூட்டாளிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து ரூ.147 கோடி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.34 கோடி அண்மையில் வெளியான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஆகும். இதுதவிர 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சி.பி.ஐ. போலீசார் மற்றும் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேகர் ரெட்டியும், அவரது கூட்டாளிகளான சீனிவாச ரெட்டி, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்தநிலையில் நேற்று அமலாக்கப்பிரிவு சார்பில் இன்னொரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த மகாவீர் கிரானி, அசோக் ஜெயின் ஆகிய 2 பேரையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவருமே சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ஆவார்கள்.

    ரூ.34 கோடி அளவில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் சேகர் ரெட்டியின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் ரூ.6 கோடி அளவில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மகாவீர் கிரானியும், அசோக் ஜெயினும் மாற்றிக்கொடுத்ததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதனால் முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மேற்கண்ட 2 பேரும் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    மேலும் அசோக் ஜெயின் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள ரூ.500, ரூ.1,000 பழைய நோட்டுகளும், 6.5 கிலோ எடையுள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டு உள்ளது.

    தற்போது கைது செய்யப்பட்டு உள்ள இருவரும் ஏற்கனவே அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பரஸ்மால் லோத்தா என்பவரோடு தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×