என் மலர்

  செய்திகள்

  ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைப்பு
  X

  ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைக்கப்பட்டார். லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக, டி.எஸ்.பி. மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

  வேலூர்:

  ஆற்காட்டை சேர்ந்தவர் குமரேசன் (வயது 52). இவரது மனைவி சுஜாதா. இவருடைய பெயரில் வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கில் 7,500 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்க சுஜாதா, தனது உறவினருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்தார்.

  ஆனால் அந்த நபர், குமரேசன் மற்றும் சுஜாதாவுக்கு தெரியாமல் நிலத்தை விற்று பணத்தை பெற்றுக்கொண்டார். பணத்தை குமரேசனுக்கு கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் தெரிகிறது. இப்படியே அந்த இடம் 2 பேருக்கு கைமாறி சென்று விட்டது.

  இதுபற்றி குமரேசன் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவில் குமரேசன் புகார் செய்தார். இதுகுறித்து ஏற்கனவே 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த வழக்கில் விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று குமரேசன், நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. உஸ்மான் அலிகானை அணுகினார். இதற்கு ரூ.5 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று டி.எஸ்.பி. உஸ்மான் அலிகான் கேட்டுள்ளார்.

  ரூ.3½ லட்சம் லஞ்சம் கொடுக்க குமரேசன் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு காரணமாக முதலில் ரூ.50 ஆயிரம் கொடுப்பதாக குமரேசன் கூறினார்.

  டி.எஸ்.பி. உஸ்மான் அலிகானும் லஞ்ச பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என கட்டளையிட்டார். எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

  லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைபடி ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் பணத்துடன் குமரேசன் நேற்று காலை வேலூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்றார்.

  அவருடன் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசாரும் சென்று மறைந்திருந்தனர். லஞ்சப்பணமான ரூ.50 ஆயிரத்தை குமரேசன் கொடுத்தார். டி.எஸ்.பி. உஸ்மான் அலிகான் பணத்தை வாங்கினார்.

  அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி.யை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். எஸ்.பி. அலுவலகத்திலேயே டி.எஸ்.பி. லஞ்சம் வாங்கி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  கைதான டி.எஸ்.பி. உஸ்மான் அலிகானிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

  லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக, டி.எஸ்.பி. உஸ்மான் அலிகான் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இன்று மாலைக்குள் அவர் சஸ்பெண்டு செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

  Next Story
  ×