search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை திருட்டு வழக்கில் கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் மீண்டும் கைது
    X

    சிலை திருட்டு வழக்கில் கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் மீண்டும் கைது

    ரூ.15 கோடி மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலை திருட்டு வழக்கில் பிரபல கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளை மீட்டு, அதில் தொடர்புள்ள குற்றவாளிகளை வேட்டையாடி பிடித்து வருகிறார்கள்.

    வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்தி சென்று விற்பனை செய்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் சுபாஷ்கபூர். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் என்று சுபாஷ்கபூர் போலீசாரால் வர்ணிக்கப்படுகிறார்.

    இவர் ரூ.600 கோடி மதிப்புள்ள 22 பழமையான சிலைகளை தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்று கோடிகளை அள்ளியவர். 1970-ம் ஆண்டிற்கு பிறகு இந்த சிலைகள் தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளன. இந்தியரான இவர் அமெரிக்காவில் வசித்தார்.

    சிலைகளை திருடி, வெளிநாடுகளுக்கு கடத்திச்செல்ல சுபாஷ்கபூருக்கு கூட்டாளிகளாக செயல்பட்டவர்கள், மும்பையைச் சேர்ந்த ஆதித்ய பிரகாஷ், வல்லபா பிரகாஷ், சூர்யபிரகாஷ், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தீனதயாளன், புதுச்சேரியைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன், புஷ்பராஜ், காரைக்குடி கனகராஜ், தினகரன் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள். சுபாஷ்கபூர் உள்ளிட்ட இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

    சுபாஷ்கபூர் ஏற்கனவே 2 சிலை திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூ நாதர் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 பழங்கால சிலைகள் திருட்டு போனது. அவற்றில் 9 சிலைகளை போலீசார் மீட்டு விட்டனர். இவற்றில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலையும் அடங்கும். மீதி 4 சிலைகள் சேதம் அடைந்து விட்டன. இந்த வழக்கில் ஏற்கனவே சுபாஷ்கபூரின் கூட்டாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர்.

    சுபாஷ் கபூர் இந்த வழக்கில் கைதாகாமல் இருந்தார். நேற்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், இந்த வழக்கில் சுபாஷ்கபூரை கைது செய்தார். இதனால் சுபாஷ்கபூர் 3 வழக்குகளில் தனித்தனியாக கைதாகி உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட வேண்டும் என்று சிலை திருட்டு தடுப்பு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தெரிவித்தார். கைதான சுபாஷ்கபூர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×