search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டுக்கோட்டை பகுதியில் ரேசன் கார்டு 100 சதவீத கள ஆய்வுப்பணி
    X

    பட்டுக்கோட்டை பகுதியில் ரேசன் கார்டு 100 சதவீத கள ஆய்வுப்பணி

    பட்டுக்கோட்டை பகுதியில் கலெக்டர் அண்ணாதுரை நேரில் வீடு வீடாக சென்று குடும்ப அட்டைகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 1183 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள மொத்தம் 6,70,039 குடும்ப அட்டைகளில், தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைதாரர்களில் முன்னுரிமை பெற்ற குடும்பங்களைக் கண்டறிய அரசாங்கத்தால் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, 100 சதவிதம் கள ஆய்வு மற்றும் மேல் தணிக்கைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 29-ந்தேதி வரை நடைபெறும்.

    இந்த கள ஆய்வுப்பணியில், மொத்தம் 1158-பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 37,473 குடும்ப அட்டைகளிலுள்ள உறுப்பினர்களின் ஆதார் மற்றும் செல்லிடபேசி எண் குடும்ப அட்டைதாரர்களால் வழங்கப்படாமல் உள்ளது.

    கள ஆய்வு செய்வதற்காக மூன்று வகையாக தயார் செய்யப்பட்ட பட்டியல்கள், நியாயவிலை அங்காடிப் பணியாளர்களால் சரிபார்க்கப்பட்டு, கள ஆய்வுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் விவரங்களும் பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல், குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினரது ஆதார் எண்ணாவது பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல், ஆதார் எண் பதிவு செய்யப்படாத குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல்.

    இப்பணியினை கண்காணித்திடவும், ஒருங்கியல் தணிக்கை செய்திடவும் வட்டம் வாரியாக கீழ்க் குறிப்பிட்டவாறு மாவட்ட நிலை அலுவலர் களான துணை கலெக்டர் கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் வட்டத்திற்கு வருவாய் கோட்ட அலுவலரும், திருவையாறு வட்டத்திற்கு உதவி ஆணையர் (கலால்) அவர்களும், பூதலூர் வட்டத்திற்கு தனித்துணை கலெக்டர் ஆகியோரும், ஒரத்தநாடு வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், பட்டுக்கோட்டை வட்டத்திற்கு வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோரும், பேராவூரணி வட்டத்திற்கு தனித்துணை கலெக்டர், பாபநாசம் வட்டத்திற்கு மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் ஆகியோரும், கும்பகோணம் வட்டத்திற்கு தனித்துணை கலெக்டர், திருவிடைமருதூர் வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோர் களப்பணி மேற் கொள்கின்றனர்.

    கள ஆய்வுப்பணிக்காக தங்கள் பகுதிக்கு வருகை தரும் அரசுப்பணியாளர்களுக்கு, அவர்கள் கோரும் விவரங்களை அளித்திடுமாறும், இது வரை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் மற்றும் செல்லிடபேசி எண் விவரங்களை பதிவு செய்திடாதவர்கள், அவ்விவரங்களை கள ஆய்வுப் பணியாளர்களிடம் அளித்து இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    பட்டுக்கோட்டை வட்டத்தில் சாமு முதலி தெரு, லட்சதோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்ப அட்டைதாரர்களின் முன்னுரிமை பெற்ற குடும்பங்களை கண்டறிய கள ஆய்வு மற்றும் மேல் தணிக்கை பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் அண்ணாதுரை நேரில் வீடு வீடாக சென்று குடும்ப அட்டைகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை வட்டம், தாமரங்கோட்டையில் அம்மா பூங்கா அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர்களுடன் நேரில் இடத்தை பார்வையிட்டு செய்தார்.ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×