search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊசி போட்டதால் பேராசிரியை உடல் கருகி பலி: குன்னூரில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதம்
    X

    ஊசி போட்டதால் பேராசிரியை உடல் கருகி பலி: குன்னூரில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதம்

    ஊசி போட்டதால் பேராசிரியை உடல் கருகி பலியானர். குன்னூரில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் குயில்ஹில் பகுதியை சேர்ந்தவர் பாலு. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது 2-வது மகள் கவிதா வயது (25). எம்.ஏ. ஆங்கில இலக்கிய பட்டதாரி.

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றினார். பின்னர் மேற்படிப்புக்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு குன்னூருக்கு வந்து விட்டார்.

    கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி கவிதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கவிதாவை சிகிச்சைக்காக அவரது தந்தை குன்னூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாக்டர் முரளிதரனிடம் அழைத்துச்சென்றார்.

    அங்கு கவிதாவை பரிசோதனை செய்த டாக்டர் குளுக்கோஸ் மூலம் 6 ஊசிகளை செலுத்தினார். அதன்பின்னர் சில மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்தார். அதனை வாங்கிக்கொண்டு பாலு தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.

    வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் கவிதாவுக்கு அரிப்பு ஏற்பட்டு உடலில் மாற்றம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தந்தை உடனே அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேரும்படி கூறினார். ஆனால் பெண்ணின் தந்தை மறுத்து தனது மகளை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிவு செய்தார்.

    கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கதவிதாவின் உடல் முழுவதும் தீயில் கருகியது போன்று மோசமானது. முகம் மற்றும் உடல் முதுமை தோற்றம் போல் மாறியது.

    இது குறித்து அக்டோபர் 7-ந்தேதி தாசில்தார் தலைமையில் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கவிதாவின் மருத்துவ செலவை டாக்டர் ஏற்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை டாக்டர் மருத்துவ செலவுக்காக கொடுத்தார்.

    இந்நிலையில் நவம்பர் மாதம் 23-ந்தேதி கவிதா சிகிச்சை பலன்றி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் கதவிதாவின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    கவிதா இறந்த தகவல் அறிந்ததும் டாக்டர் முரளிதரன் தலைமறைவானார். கவிதாவின் மருத்துவச்செலவு ரூ.13 லட்சம் ஆனது. ஆனால் டாக்டர் ரூ.2. லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். மீதி பணம் எப்படி பெறுவது என்று மீண்டும் தாசில்தார் ஜான்மனோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது டாக்டர் முரளிதரனின் தந்தை மீதி பணத்திற்கு காசோலையை கொடுத்தார்.

    இந்நிலையில் தலைமறைவான டாக்டர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில் எனது தந்தையை மிரட்டி தாசில்தார் ஜான்மனோகரன் காசோலையை பெற்று கவிதாவின் உறவினர்களிடம் கொடுத்து விட்டார். எனவே குறிப்பிட்ட காசோலையை வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறியிருந்தார்.

    அதன்படி குறிப்பிட்ட காசோலையை வங்கி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தந்தை பாலு மற்றும் உறவினர்கள் இது குறித்து பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

    தவறான சிகிச்சை அளித்து கவிதாவின் இறப்புக்கு காரணமான டாக்டர் மீதியுள்ள பணத்தை கொடுக்க வேண்டும் என்று இன்று காலை குன்னூர் வி.பி. தெரு பழைய லாரி நிலையம் அருகே அனைத்து பொதுநல அமைப்புகள், அனைத்து பொது நலச்சங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கவிதாவின் உயிரிழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தங்கள் கோரிக்கையை அப்போது வலியுறுத்தினர்.

    Next Story
    ×