search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிண்டியில் கைதான தாவூத் சுலைமான்
    X
    கிண்டியில் கைதான தாவூத் சுலைமான்

    பா.ஜனதா தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம்: கைதான தீவிரவாதிகள் பற்றிய தகவல்

    குண்டு வெடிப்பு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் பா.ஜனதா தலைவர்களை கொலை செய்யவும், தமிழக சிறைகளில் குண்டு வைக்கவும் சதி திட்டம் தீட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    தீவிரவாதிகளின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டவும், தீவிரவாத செயல்களை தடுக்கவும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    தமிழகத்திலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை மாநில உளவு பிரிவு போலீசார் ரகசியமாக திரட்டி வருகிறார்கள்.

    இதன் பயனாக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இருப்பினும் புதிது புதிதாக இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களில் சேர்க்கப்படுவதும், அவர்கள் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

    தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்து இயக்க பிரமுகர்களையும், பா.ஜனதா கட்சி தலைவர்களையும் கொலை செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

    2011-ம் ஆண்டு மதுரைக்கு வருகை தந்த அத்வானியை பைப் வெடிகுண்டு மூலமாக கொலை செய்ய சதி திட்டம் நடந்தது. அவர் வரும் வழியில் பாலத்துக்கு அடியில் பைப் வெடி குண்டையும் தீவிரவாதிகள் வைத்தனர்.

    ஆனால் கடைசி நேரத்தில் அந்த குண்டு கண்டு பிடிக்கப்பட்டு செயல் இழக்க வைக்கப்பட்டது. இதனால் அத்வானி உயிர் தப்பினார். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சும்சுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இச்சம்பவத்துக்கு பின்னர் தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களும், அவர்களுக்கு உதவி செய்பவர்களும் வேட்டையாடப்பட்டனர். அப்போது அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தினர் வலுவாக காலூன்ற திட்டமிட்டிருந்தனர். இதனை போலீசார் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டனர்.

    இருப்பினும், தென் மாநிலங்களில் அவ்வப்போது பயமுறுத்தும் வகையிலான குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தன. பைப் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட சம்சுல், 3 வருடம் கழித்து 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.

    இதன் பின்னரே குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

    கடந்த ஏப்ரல் 7-ந்தேதி ஆந்திர மாநிலம் சித்தூரில் கோர்ட்டு வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் காயம் அடைந்தனர். அதே ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் கோர்ட்டு வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் வாலிபர் ஒருவர் காயம் அடைந்தார்.

    இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி கர்நாடக மாநிலம் மைசூர் கோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது. நவம்பர் 1-ந்தேதி கேரள மாநிலத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேற்றப்பட்டது. இந்த முறை மலப்புரம் கோர்ட்டில் குண்டு வெடித்தது.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 6 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக நிகழ்த்தப்பட்டிருந்தன. பிரசர் குக்கர், டிபன் பாக்ஸ்களில் பட்டாசுகளையும், சக்தி குறைந்த வெடிமருந்துகளையும் வைத்து குண்டுகளை வெடிக்க செய்திருப்பதும் தெரிய வந்தது.

    அதே நேரத்தில் ஒரே நபர்களே இந்த குண்டு வெடிப்பை நடத்தி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த வகையிலான வெடிகுண்டுகள் தமிழகத்தில் பயன்படுத்தப்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் கோர்ட்டு வளாகத்தில் குண்டு வைத்தது தமிழகத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்கிற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பிரசர்குக்கரை ஆய்வு செய்தனர். அதில் உள்ள சீரியல் எண்களை வைத்து அந்த குக்கர்கள் எங்கு வாங்கப்பட்டன என்பதை போலீசார் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது மதுரையில் உள்ள பிரபல பாத்திர கடையில் குக்கர் வாங்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போதுதான் குண்டு வெடிப்பு சதிகாரர்கள் மதுரையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    அவர்களை பிடிக்க போலீசார் கடந்த சில நாட்களாக மதுரையில் முகாமிட்டு ரகசியமாக விசாரணை நடத்தினர்.

    அப்போது குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் யார்-யார்? என்பது அடையாளம் காணப்பட்டது.

    இதையடுத்து மதுரை அய்யர் பங்களா பகுதியை சேர்ந்த முகம்மது அயூப் (வயது23), புதூர் மண்மலை மேட்டை சேர்ந்த கரீம்ராஜா (26), இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


    முகம்மது அயூப்


    சென்னையில் அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த தாவூத் சுலைமான் என்பவரும் கைது செய்யப்பட்டார். என்ஜினீயரான இவரது சொந்த ஊர் மதுரை ஆகும்.

    பிடிபட்ட தீவிரவாதிகள் 4 பேரும் நேற்று இரவே பலத்த பாதுகாப்புடன் பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அம்மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்துகிறார்கள்.

    அதன்பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது 3 மாநிலங்களிலும் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றி அவர்களிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

    கைதான தீவிரவாதிகளில் சென்னையில் கைது செய்யப்பட்ட தாவூத் சுலைமான் துரைபாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கம்ப்யூட்டர்களில் திட்டங்களை வகுப்பது, படங்களை வடிவமைப்பது உள்ளிட்டவைகளில் இவர் கைதேர்ந்தவர்.

    குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த இடங்களில் பின்லேடன் படம் பொறித்த துண்டு பிரசுரங்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன. இவைகளை எல்லாம் சென்னையில் இருந்தபடியே தாவூத்சுலைமான் தயார் செய்து தனது கூட்டாளிகளுக்கு அனுப்பி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக போலீசார், 4 தீவிரவாதிகளையும் காவலில் எடுத்து விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றி நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் அடிப்படை (பேஸ்மெண்ட்) அல்கொய்தா என்கிற பெயரில் புதிய இயக்கம் ஒன்றையும் தொடங்கி அதன் மூலமாகவே சதி திட்டங்களை தீட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த சம்சுல் (அத்வானியை கொலை செய்ய குண்டு வைத்தவர்) தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தீவிரவாதிகள் பயன்படுத்திய குண்டுகள் அனைத்தும் மதுரையில் செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இந்த குண்டுகளை சம்சுல் மேற்பார்வையில் செய்து இந்த 4 பேரிடமும் கொடுத்து நீதிமன்ற வளாகத்தில் வெடிக்க செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

    இதற்காக இவர்கள் அனைவரும் மதுரையில் மாதத்திற்கு ஒருமுறை ரகசிய கூட்டங்களை நடத்தி சதி திட்டங்களை வகுத்துள்ளனர்.

    தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் நீதிமன்றங்களை எச்சரிக்கும் வகையிலேயே குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றியதாக 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்கள் 22 பேரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைசாலைகளை குண்டு வைத்து தகர்த்த இவர்கள் திட்டமிட்டு செயல்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×