search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்: அப்பல்லோ தலைவர் பேட்டி
    X

    ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்: அப்பல்லோ தலைவர் பேட்டி

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். அவர் 90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.
    சென்னை:

    சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் உறுப்புகள்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சி முடிந்ததும் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:-முதல்- அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு அவரது உடல் நிலை எவ்வாறு உள்ளது?

    பதில்:- நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவக்குழு, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ நிபுணர்கள் அளித்த சிகிச்சையாலும் 6, 7 வாரங்களுக்கு பிறகு அவருடைய அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்படுவதை உணர்ந்தோம்.

    எனவே ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை அளிக்க அவசியம் இல்லை. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்த சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள், இருதய சிகிச்சை நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சேர்ந்து முதல்-அமைச்சர் மன மகிழ்ச்சியுடன் இருக்கும் சாதாரண வார்டுக்கு மாறலாம் என்று தீர்மானித்தனர். எனவே அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

    நான் மிகவும் மகிழ்ச்சியோடு கூறுகிறேன். அப்பல்லோ மருத்துவமனையின் சிறந்த டாக்டர்கள் சிலர் கடந்த சில வாரங்களாக வீட்டுக்கே போகவில்லை. அவர்கள் அனைவரின் துணையால் முதல்-அமைச்சருக்கு கடும் பிரச்சினை இருந்த அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்படுகின்றன.

    அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீங்களே படுக்கையில் 12 மணிநேரம் இருந்தாலே சில உடற்பயிற்சிகள் தேவைப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சில வாரங்கள் படுக்கையில் இருந்ததால் சில தொடர் சிகிச்சை தேவைப்படுகின்றன. அவருக்கு முழு உடல் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர் தானாகவே சில உடற்பயிற்சிகளை செய்ய பிசியோதெரபி நிபுணர்கள் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு வகையில் பிசியோதெரபி கொடுக்கப்படுகிறது. அடுத்து அவர் எழுந்து நின்று நடக்க வேண்டும். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர் அவசரப்பட வில்லை. அது எப்போது நடக்கும் என்று கேட்டால் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். நமது முதல்-அமைச்சர் மனவலிமை படைத்தவர். அவரே வீட்டுக்கு செல்வதை அவரே முடிவு எடுப்பார். முடிவு எடுப்பது நான் அல்ல.

    கேள்வி:-டிரக்கியாஸ்டமி பொருத்தப்பட்டுள்ள ஜெயலலிதா இயற்கையாக சுவாசிக்கிறாரா?

    பதில்:- ஜெயலலிதாவுக்கு டிரக்கியாஸ்டமி குழாயை நாங்கள் பொருத்தி உள்ளோம். பெரும்பாலான நேரங்களில் அவரே இயல்பாகவே சுவாசிக்கிறார். 90 சதவீத நேரம் இயல்பாக மூச்சு விடுகிறார். அவருக்கு வசதியாகும் வரை டிரக்கியாஸ்டமி குழாயை அப்படியே வைத்திருப்போம். அந்த குழாய் பொருத்தப்பட்டால் பொதுவாக யாராலும் பேசமுடியாது. அதில் ஒரு ‘ஸ்பீக்கர்’ பொருத்தப்பட்டுள்ளது. அவர் அந்த ஸ்பீக்கரில் பேசுகிறார். எந்த நேரமும் அதை பயன்படுத்தி பேசுவது கஷ்டமானது. அவர் சில நிமிடங்கள் அந்த ஸ்பீக்கரில் பேசுகிறார். ஸ்பீக்கரில் பேசுவது எளிதல்ல. ஏனெனில் அது மூச்சை இழுத்து பிடிக்கும். அவருக்கு இது தற்காலிகமானது.

    கேள்வி:-அவர் எப்போது வீட்டுக்கு திரும்புவார்?

    பதில்:- ஜெயலலிதா எப்போது வீட்டுக்கு திரும்புவார் என்று கேட்டால் அதை முடிவு செய்வது நாங்கள் அல்ல. இங்கு இருக்கும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோ, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரோ முடிவு செய்ய முடியாது. ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். அவர் வீட்டுக்கு திரும்புவது எப்போது என்று ஜெயலலிதா சொல்கிறாரோ அப்போதுதான் அவர் வீட்டுக்கு செல்வார். எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கிறதாக அவர் எப்போது உணர்கிறாரோ? அப்போது வீடு திரும்புவார்.

    இவ்வாறு அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பேட்டி அளித்தார்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று 65-வது நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் பிசியோதெரபி சிகிச்சை நிபுணர் மேரி சியாங் நேற்று காலை 7.20 மணிக்கு வந்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து விட்டு பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து இரவு புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×