search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் அருகே மழைக்காக அம்மன் கோவிலில் கஞ்சி காய்ச்சி நூதன வழிபாடு
    X

    ராசிபுரம் அருகே மழைக்காக அம்மன் கோவிலில் கஞ்சி காய்ச்சி நூதன வழிபாடு

    ராசிபுரம் அருகே மழைக்காக அம்மன் கோவிலில் கஞ்சி காய்ச்சி நூதன வழிபாடு நடந்தது. இந்த அதிசய நிகழ்ச்சியை காண பொதுமக்கள் பலர் அங்கு திரண்டு வந்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி ஊராட்சிக்குட்பட்ட வெங்காய பாளையத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சில மாதங்களாக மழை பெய்யாததால் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள செல்வமுத்து மாரியம்மன் சாமிக்கு கஞ்சி காய்ச்சி வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.

    அதற்காக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 3 நாட்களாக வீடு வீடாகச் சென்று உப்பு இல்லாத சாப்பாட்டை வாங்கி வந்து கஞ்சி போன்று கரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்கள்.

    பிறகு அந்த சாப்பாட்டை பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று (சனிக்கிழமை) அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.

    வெங்காயபாளையம், ஒடுவன்குறிச்சி, எஸ்.பி.கே.நகர் ஆகிய கிராமங்களில் வீடு வீடாகச் சென்று அரிசி, கம்பு, சோளம் போன்ற தானியங்களை வாங்கி வந்து பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். பிறகு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள்.

    மழை இல்லாததால் பெண்கள் ஊரைவிட்டுச் செல்வது போன்ற அதிசய நிகழ்ச்சி நடந்தது. மழை இல்லாததால் அந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் வெங்காயபாளையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் வரை சோகத்துடன் சென்றனர். இதை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் அவர்களை சமாதானப்படுத்தி திரும்பி சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்தனர். இந்த அதிசய நிகழ்ச்சியை காண பொதுமக்கள் பலர் அங்கு திரண்டு வந்தனர்.

    Next Story
    ×