search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா அரசால் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது: ஜி.கே.வாசன்
    X

    பா.ஜனதா அரசால் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது: ஜி.கே.வாசன்

    பழைய ரூ.500, 1000 செல்லாது என்ற பா.ஜனதா அரசின் அறிவிப்பால் நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு உள்ளது என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

    கும்பகோணம்:

    பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது. அவைகளை வருகிற டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மத்திய அரசு ரூ.2000 புதிய நோட்டை அறிமுகப்படுத்திய போதிலும் கடும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் பெற முடியாமல் 10 நாட்களுக்கும் மேலாக அவதிபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் காய்கறி சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம் குறை கேட்டார். அப்போது சில்லரை தட்டுப்பாடு காரணமாக வியாபாரம் பாதியாக குறைந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் சந்தைக்கு வந்து காய்கறி வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான மக்கள்தான் காய்கறி வாங்க வந்துள்ளனர் என்று கூறினர்.

    அவர்கள் கல்லாவில் இருந்த வியாபார பணத்தையும் எடுத்து காட்டினர். மேலும் சில்லரை பிரச்சினை காரணமாக காய்கறி விலையை குறைத்து வழங்க வேண்டி உள்ளது என்றும் தெரிவித்தனர்.

    அனைத்து வியாபாரிகளையும் சந்தித்த பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பழைய ரூ.500, 1000 செல்லாது என்ற பா.ஜனதா அரசின் அறிவிப்பால் நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு உள்ளது. இது கருப்பு பணம், கள்ளப்பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது. இதனால் ஏழைகளும், சிறு தொழில் செய்பவர்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்னர்.

    ரூபாய் நோட்டு பிரச்சினையால் தாராசுரம் காய்கறி சந்தையில் வியாபாரம் பாதியாக குறைந்து உள்ளது என்றும், மக்களின் வருகை குறைந்து விட்டது என்றும் கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்ய வேண்டிய தக்காளியை ரூ.5-க்கும், கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்ய வேண்டிய கேரட்டை ரூ.10-க்கும் விற்பனை செய்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் வணிகர்கள் வங்கி காசோலை வசதி இல்லாமல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

    மத்திய அரசு தற்போது அறிமுகப்படுத்தி உள்ள ரூ.2000 நோட்டுக்கு பதில் ரூ.500, 100 ஆகியவைகளை அதிக அளவு புழக்கத்துக்கு கொண்டு வந்தால் மட்டுமே பணப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

    10 நாட்களுக்கு மேலாக பணப்பிரச்சினை தீராமல் பொதுமக்கள் போராடி வருகிறார்கள். மக்கள் இயல்பு நிலைக்கு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல், கியாஸ், தனியார் மருத்துவமனை ஆகியவைகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை வாங்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பணம் பட்டுவாடா செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் அசோக்குமார், சர்ஜித், சாதித்அலி உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×