search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் - 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
    X

    நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் - 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

    நெடுந்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்டனர். மேலும் 11 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. மீன்கள் வாங்க வியாபாரிகள் வருகை குறைவு, கூலி கொடுக்க வழியில்லாதது போன்றவற்றால் மீனவர்கள், மீன்பிடி தொழிலுக்கு செல்வதையே நிறுத்தி விட்டனர்.

    இதனால் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தற்போது நிலைமை ஓரளவு சீரான நிலையில் நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதில் சில படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடி பணியில் ஈடுபட்டன. அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர்.

    அவர்கள் ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.

    அப்போது சில விசைப் படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த மீனவர்களை தாக்கினர். மேலும் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் தாக்கி சேதப்படுத்தினர்.

    இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்த நேரத்தில் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிழவன் பாண்டியன், ராமேசுவரம் சேகர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

    இதனால் பீதியடைந்த சக மீனவர்கள் அங்கிருந்து தங்கள் படகுகளுடன் வேகமாக கரையை நோக்கி புறப்பட்டனர். 2 படகுகளையும் அதில் இருந்த மீனவர்கள் கருமலையான், வீரணன், ராஜகோபால், ஜோதி முத்துராமலிங்கம், முத்துக்குமார், முத்துநாதன், முத்து இருளாண்டி, ஸ்டாலின், குமார், முருகன், விசு ஆகிய 11 பேரையும் காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஒரு வாரத்திற்கு பின்னர் கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே மீனவர்கள் மீது தாக்குதல், சிறைபிடிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று இருப்பது ராமேசுவரம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×