search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்: திருநாவுக்கரசர்
    X

    மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்: திருநாவுக்கரசர்

    ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
    சென்னை:

    டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

    முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் செல்லக்குமார், கார்த்திக் சிதம்பரம், டி.யசோதா, நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரும் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    காங்கிரஸ் ஒன்றாக இருக்கிறதா? ஒற்றுமையாக இருக்கிறதா? என்று சந்தேகப்படுபவர்கள் இந்த மேடையை பார்த்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். இந்தியாவில் யாரையும் சந்திக்க திராணியுள்ள தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். அவர் எந்த போராட்டத்துக்கும் செல்லவில்லை.

    தியாகம் செய்து உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. மோடியை விட செல்வாக்கு மிக்கவர் ராகுல்காந்தி.

    ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் மக்கள் செல்வாக்கை பெற்றவர்கள் என சொல்லிவிட முடியாது. தேவே கவுடாவும் பிரதமராக இருந்தவர்தான். அவரை மக்கள் செல்வாக்குமிக்க தலைவர் என சொல்ல முடியுமா? அதே போல்தான் மோடியும். குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டராக தோளில் மஞ்சள் பையோடு சுற்றி வந்தவர். உள்நாட்டைப் பற்றி கூட அறியாதவர். எனவே தான் இன்று வருடத்தில் 360 நாட்களும் வெளிநாட்டில் சுற்றுகிறார்.

    உலகம் சுற்றும் வாலிபர் மோடிக்கு நாட்டுப் பிரச்சினை எப்படி தெரியும். மோடி சர்வாதிகார ஜனநாயக விரோத ஆட்சி நடத்துகிறார். இந்த ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி விரைவில் முடிவு கட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது:-

    மோடி, ராகுல் காந்தியை சிறுவர் என நினைக்கிறார். காங்கிரஸ் முடங்கி போன கட்சி. செத்துப்போன கட்சி என நினைக்கிறார். ஆனால் ராகுல்காந்திதான் இந்த நாட்டை ஆள தகுதி படைத்தவர்.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் 3-வது பெரிய கட்சியாக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் கோடான கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. இங்கு திரண்டிருக்கிற காங்கிரஸ் தொண்டர்கள் சோர்ந்து விடக்கூடாது.

    நிச்சயமாக விரைவில் நல்ல காலம் வரும். மோடிக்கு ஒனறு சொல்வேன். தமிழக பா.ஜனதாவை அடக்கி வையுங்கள். அக்கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரி தமிழிசை காங்கிரசையும், திருநாவுக்கரசையும் திட்டுவதை மட்டுமே கொள்கையாக கொண்டுள்ளார்.

    தனியாக நிற்க முடியுமா? என பொன்.ராதாகிருஷ்ணன் கேட்கிறார். இந்தியாவில் காங்கிரசை தவிர எந்த கட்சியும் தனித்து நின்று ஆட்சி அமைத்தது கிடையாது என்ற வரலாற்றை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.

    நடிகை குஷ்பு பேசும் போது, “மக்கள் நிம்மதியாக தூங்குவதற்கு காரணம் ராணுவ வீரர்கள். தூக்கமின்றி நாட்டை காப்பது தான் அவர்கள் பணி. அவர்களது நீண்டகால கோரிக்கையை மோடி அரசு நிறைவேற்றவில்லை. மக்களுக்கும் இந்த அரசு எதையும் செய்யவில்லை. இந்த போராட்டம் ஜனநாயகத்தை காக்கும் போராட்டம்.

    மோடி அரசு ஜனநாயகத்தை நசுக்கி கொண்டிருக்கிறது. இந்த நிலை மாறி மக்களுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமென்றால் மோடியை வீழ்த்தி ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். அதற்கான ஆரம்பம்தான் இது” என்றார்.

    நடிகை நக்மா பேசும் போது, “மத்தியில் மக்களுக்கான அரசு நடக்கவிலலை. மக்கள் விரோத ஜனநாயக விரோத அரசாகத்தான் மோடி அரசு செயல்படுகிறது” என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி.க் கள் பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன், ராணி, ஆருண், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, ஹசீனா சையத், அஸ்லம் பாட்சா, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பாளை. எம்.அக்தர், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×