search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட சாந்தி
    X
    கொலை செய்யப்பட்ட சாந்தி

    தி.நகர் கோடீஸ்வர பெண் கொலையில் நேபாள வாலிபர் கைது

    தி.நகர் கோடீஸ்வர பெண் கொலை வழக்கில் நேபாள வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    சென்னை:

    தி.நகர் அபிபுல்லா சாலையில் கடந்த 1-ந்தேதி சாந்தி என்ற கோடீஸ்வர பெண் கொலை செய்யப்பட்டார்.

    பழமையான பங்களா வீட்டில் வசித்து வந்த இவருக்கு சொந்தமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அவர் வசித்து வந்த வீடு மட்டுமே ரூ.20 கோடி மதிப்பாகும்.

    சாந்திக்கு திருமணமாகாததால் அவரது சொத்துக்கு வாரிசு இல்லை. இதனால் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இது தொடர்பாகவே போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் கோடீஸ்வர பெண் சாந்தி கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக நேபாள வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் கோரக்சிங்.

    நகை-பணத்திற்கு ஆசைப்பட்டு கோரக்சிங் கூட்டாளிகள் மான்சிங், லலித் மற்றும் ஒருவருடன் சேர்ந்து திட்டம் போட்டு சாந்தியை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    சாந்தி கொலை தொடர்பாக துப்பு துலக்குவதற்கு வீட்டின் எதிரில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களே போலீசாருக்கு கைக்கொடுத்துள்ளன. அந்த கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் நேபாள வாலிபர்கள் 3 பேர் இருந்தனர். அதில் சாந்தியின் வீட்டுக்கு வந்துவிட்டு வெளியில் செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவர்கள் யார் என்பது பற்றியும் போலீசார் துப்பு துலக்கினர். ஆனால் உடனடியாக அவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    இதுதொடர்ந்து நேபாள வாலிபர்கள் யாராவது தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடுகளில் பணிபுரிகிறார்களா? என்பது பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கினர். அந்த பகுதி முழுவதும் வீடு வீடாக விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது சாந்தியின் வீட்டுக்கு எதிரில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் கோரக்சிங் என்ற நேபாள வாலிபர் வேலை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்தான் சாந்தியை கொலை செய்ய மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.

    சென்னையில் பணிபுரியும் தனது மற்ற நேபாள நண்பர்களான மான்சிங், லலித் உள்ளிட்ட 3 பேரிடம் சாந்தி தனியாக வசிப்பது பற்றி கோரக்சிங் கூறியுள்ளார். சாந்தியின் வீட்டில் அவர் மட்டுமே வசித்து வருவதாகவும் வேறு யாரும் வீட்டில் இல்லை என்றும் அங்கு கோடிக்கணக்கில் நகை-பணம் உள்ளது.

    அதனை நாம் சேர்ந்து கொள்ளை அடிக்கலாம் என்றும் கோரக்சிங் தெரிவித்து இருக்கிறார். இதன் பிறகே சாந்தியை கொன்று கொள்ளையடிக்க 4 பேரும் திட்டம் போட்டனர்.

    சாந்தி கொலை செய்யப்பட்ட அன்று கோரக்சிங் கூட்டாளிகள் 3 பேரும் தி.நகர் அபிபுல்லா சாலைக்கு வந்தனர். அவர்களிடம் கோரக்சிங் சாந்தியின் வீட்டை அடையாளம் காட்டினார். கூட்டாளிகள் 3 பேரும் வீட்டுக்கு சென்று சாந்தியின் கை, கால்களை கட்டி, கத்தியால் குத்தி அவரை கொலை செய்தனர்.

    பின்னர் வீட்டில் இருந்த பீரோவில் நகை-பணம் இருக்கிறதா என்று பார்த்தனர்.

    ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல பெரிய அளவில் வீட்டில் நகைகள் இல்லை. லட்சக்கணக்கான ரூபாய் மட்டுமே இருந்தது. அதுவும் பழைய நோட்டுக்களாக இருந்தது. இவை அனைத்தையும் வாரி சுருட்டிய 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இவர்கள் யாரும் இன்னும் பிடிப்படவில்லை. கோரக்சிங் மட்டும் போலீசில் சிக்கியுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சொத்துக்காகவே சாந்தி கொலை செய்யப்பட்டதாக போலீசார் கூறி வந்த நிலையில் நகை-பணத்துக்காக திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் தனிமையில் வசித்து வருகிறார்கள். அவர்கள் மத்தியில் இச்சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனை தொடர்ந்து முதியவர்களின் பாதுகாப்பாக கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

    இந்த வழக்கில் மிகவும் திறமையாக துப்பு துலக்கிய தேனாம்பேட்டை உதவி கமி‌ஷனர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் கிரி மற்றும் தனிப்படை போலீசாரை கூடுதல் கமி‌ஷனர் சங்கர், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் சரவணன் ஆகியோர் பாராட்டினர்.
    Next Story
    ×