search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்
    X

    தஞ்சையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்

    தஞ்சையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தஞ்சை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சை கீழவஸ்தாசாவடி அருகே பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் ஒரத்தநாடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஏட்டுகள் பழனிவேலு, சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மன்னார்குடியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த ஒரு காரை பறக்கும்படையினர் வழி மறித்து சோதனை நடத்தினர்.

    அந்த காரில் இரும்பு பெட்டி இருந்தது. அதில் என்ன இருக்கிறது என்று காரில் இருந்தவரிடம் பறக்கும்படையினர் விசாரித்தபோது, அதில் பணம் இருப்பதாகவும், மன்னார்குடியில் உள்ள தனியார் வங்கி கிளையில் இருந்து தஞ்சையில் உள்ள தனியார் வங்கிக்கு ரூ.50 லட்சம் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். அதற்காக வங்கியில் இருந்து கொடுக்கப்பட்ட ஆவணங்களையும் பறக்கும்படையினரிடம் காண்பித்தார். ஆனால் அந்த ஆவணங்களில் போதிய தகவல்கள் இல்லாததால் பணம் கொண்டு வரப்பட்ட காருடன் தஞ்சை தாசில்தார் அலுவலகத்திற்கு பறக்கும் படையினர் வந்தனர்.

    அங்கு தாசில்தார் குருமூர்த்தியிடம் வங்கி ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார். அந்த ஆவணத்தில் பணம் கொண்டு வரப்பட்ட கார் நம்பர் குறிப்பிடப்படவில்லை. மேலும் வங்கியில் இருந்து பணம் மற்றொரு வங்கிக்கு கொண்டு செல்லும்போது போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணம் கொண்டு செல்லப்படவில்லை.

    இது குறித்து தஞ்சையில் உள்ள வங்கி மேலாளரிடம் தாசில்தார் குருமூர்த்தி விசாரித்தபோது, ரூ.50 லட்சத்திற்கு மேல் கொண்டு சென்றால் தான் போலீஸ் பாதுகாப்பு தேவை என்றும், தற்போது ரூ.50 லட்சம் கொண்டு செல்லப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும் பணம் கொண்டு செல்வதற்கு வங்கியில் இருந்து உரிய ஆவணங்கள் கொடுக்கப்படாததால் இந்த தகவல் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்ய அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர். அதைத்தொடர்ந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக தாசில்தார் குருமூர்த்தி நிருபர்களிடம் கூறும்போது, காரில் கொண்டு வரப்பட்ட ரூ.50 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் தனியார் வங்கிக்கு சொந்தமானது என்று கூறி சில ஆவணங்களை சமர்ப்பித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்ய கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியும் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் பரிசீலனை செய்து பணம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×