search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: மத்திய அரசை கண்டித்து ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: மத்திய அரசை கண்டித்து ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

    காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து பா.ம.க. சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே டாக்டர் ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சென்னை:

    காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து பா.ம.க. சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே டாக்டர் ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    காவிரி பிரச்சினை 125 ஆண்டு கால பிரச்சினை. 1924ல் மைசூர் மாகாணத்துக்கும், சென்னை மகாணத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

    அந்த ஒப்பந்தத்தை 1974-ல் புதுப்பிப்பதற்கு தி.மு.க. தவறிவிட்டது. இந்த விசயத்தில் முதல் முதலில் துரோகம் செய்தது தி.மு.க. அப்போது ஒப்பந்தத்தை புதுப்பித்து இருந்தால் இப்போது பிரச்சினை இல்லை.

    தொடர்ந்து வந்த ஆட்சிகளும் காவிரி விசயத்தில் தமிழ் நாட்டுக்கு துரோகத்தையே இழைத்து உள்ளன. காங்கிரசும், பா.ஜனதாவும் கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது.

    எனவே அவர்களுக்கு அந்தமாநிலம் முக்கியம். அதை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு எதிராகவும், கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறது.

    இது தவிர தமிழகத்தை ஆண்ட கட்சிகள் வாக்கு வங்கி, கூட்டணி ஆட்சி, ஆட்சியை கலைக்காமல் இருப்பது போன்றவற்றை பற்றிதான் கவலைபட்டார்கள்.

    இந்த கட்சிகளுக்கு தமிழக மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் இப்போது மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பதன் மூலம் பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து உள்ளது. இது தமிழகத்திற்கு எதிரானது. தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயம். இதற்காக மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்.

    அடுத்த கட்ட போராட்டமாக தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கருப்பு கொடி காட்டுவது உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவது பற்றி செயற்குழுவை கூட்டி முடிவு செய்வோம். தண்ணீர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண ஆறுகளை தேசிய மயமாக்க வேண்டும். அதற்கு சட்டமும் இருக்கிறது. மத்திய அரசுக்கு அதிகாரமும் இருக்கிறது

    பிரதமர் மோடி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இந்த துரோகம் இனியும் தொடர கூடாது.

    இவ்வாறு அவர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொது செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம், கே.என்.சேகர், வக்கீல் பாலு, பசுமை தாயகம் அருள், மு.ஜெயராமன், ஆலயமணி, மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், ஏழுமலை, யமுனா, நாசே வெங்கடேசன், வி.ஜெ.பாண்டியன், வக்கீல் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×