search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து திருச்சியில் 15-ந்தேதி காங்கிரஸ் உண்ணாவிரதம்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
    X

    மத்திய அரசை கண்டித்து திருச்சியில் 15-ந்தேதி காங்கிரஸ் உண்ணாவிரதம்: திருநாவுக்கரசர் அறிவிப்பு

    மத்திய அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) திருச்சியில் எனது தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பிரச்சினையில் மத்திய மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்சினையில் உரிமைகளுக்காக போராடி, இறுதியாக நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது.

    இத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை பக்ராபியாஸ் மேலாண்மை வாரியத்தை உருவாக்கிய முறைகளை பின்பற்றி மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதை நிறைவேற்ற மறுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும், அதை நிறைவேற்ற முன்வராமல், கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.

    இதனால் காவிரி பாசனப் பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியாமல் பல்வேறு இழப்புகளுக்கு விவசாயிகள் ஆளாகி வருகிறார்கள்.

    மத்திய அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) திருச்சியில் எனது தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

    இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்ட மன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அமைப்புகளும், காவிரி பாசன பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், காங்கிரஸ் இயக்கத்தினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தியும், இக்கோரிக்கையை நேரில் வலியுறுத்த பிரதமர் அலுவலகம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த நரேந்திர மோடியை கண்டித்தும் நடைபெறவுள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு அனைவரும் அணி திரண்டு பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    Next Story
    ×