search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவிதா உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்.
    X
    கவிதா உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்.

    டாக்டர் பரிந்துரைத்த மருந்து சாப்பிட்ட மாணவி உடல் நலம் பாதிப்பு: கொப்பளம், எரிச்சலால் அவதி

    குன்னூரில் டாக்டர் பரிந்துரைத்த மருந்து சாப்பிட்ட மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிச்சோலையைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகள் கவிதா (25). எம்.பில் படித்து வருகிறார். திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கவிதாவை குன்னூர் மவுண்ட் ரோட்டில் உள்ள கிளினீக்குக்கு அவரது தந்தை அழைத்துச் சென்றார்.

    அப்போது கவிதாவின் உடல் நிலையை பரிசோதித்த டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்தார். அந்த மருந்தை வீட்டிற்கு சென்று சாப்பிட்ட சிறிது நேரத்தில் கவிதாவின் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு கொப்பளம் உருவானது.

    இதையடுத்து மறுநாள் மீண்டும் அதே டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்தார். தற்போது, கவிதா கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கவிதாவின் உடல் நிலை பற்றி தெரியவந்ததும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். குன்னூர் தாசில்தார் ஜான் மனோகர் ராஜ் தலைமையில் டாக்டர் சங்க நிர்வாகிகள், கவிதாவின் தந்தை உள்பட உறவினர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது.

    அப்போது, கவிதாவின் தந்தை பாலு, டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரையை உட்கொண்டதில் பாதிப்பு ஏற்பட்டு என் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. 60 சதவீதம் கண்பார்வை குறைந்து விடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

    அப்போது கவிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறும்போது, சிகிச்சையில் எந்தவித தவறும் இல்லை எதிர்பாராத விதமாக நோயாளியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு மாத்திரைதான் காரணமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மனிதாபிமான அடிப்படையில் பெண்ணின் சிகிச்சைக்கு 75 சதவீத தொகை தர ஒப்புக்கொள்கிறேன் என்றார்.

    இதே போல் டாக்டர் சங்க நிர்வாகிகளும் கவிதாவின் கண்பாதிப்புக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதனால் அந்த பிரச்சனையில் உடன்பாடு ஏற்பட்டது.

    கவிதாவிற்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×