search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை தாக்கல் செய்த மனு வாபஸ்
    X

    சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை தாக்கல் செய்த மனு வாபஸ்

    பிரேத பரிசோதனை அறிக்கையை கேட்டு ராம்குமாரின் தந்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டது
    சென்னை:

    புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை கேட்டு அவரது தந்தை பரமசிவன் தாக்கல் செய்த மனுவை திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பரமசிவன் தாக்கல் செய்த மனு நீதிபதி பொன்.கலையரசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பரமசிவன் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதி பொன்.கலையரசன் ஏற்கவில்லை.

    இதையடுத்து மனுதாரர் வக்கீல், அரசு தரப்பு வக்கீல் ஆகியோர் வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார். பிற்பகலில் விசாரணைக்கு எடுத்தபோது, இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு பட்டியலிட கோரி ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் மனு கொடுத்துள்ளதாக கூறி, அந்த மனுவின் நகலை மனுதாரர் வக்கீல் கொடுக்க முயன்றார். அதை நீதிபதி வாங்க மறுத்து விட்டார். பின்னர், இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக வக்கீல் கூறினார். இதுகுறித்து நீண்ட விவாதம் நடந்தது. இறுதியில் மனுவை திரும்ப பெற அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×