search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் 4 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்: கலெக்டர் தகவல்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் 4 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்: கலெக்டர் தகவல்

    பெரம்பலூர் மாவட்டத்தில் 4 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரம்பலூர் நகராட்சி, 3 பேரூராட்சி, 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 17ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது என்று கலெக்டர் கூறியுள்ளார்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான நந்தகுமார் கூறியதாவது:-

    முதல்கட்டமாக பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகள், பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றுக்கு வாக்குப்பதிவு வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதில் 377 வாக்குச்சாவடி மையங்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 935 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    2வது கட்டமாக லப்பைக் குடிகாடு பேரூராட்சி, ஆலத்தூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றுக்கு வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதில் 356 வாக்குச்சாவடி மையங்களில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 583 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி உறுப்பினர் பதவிக்கு 21 பேர், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 60 பேர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 8 பேர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 76 பேர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 121 பேர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 32 பேர் என மொத்தம் ஆயிரத்து 318 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

    அக்டோபர் 3-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. அக்.4ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. அக்.6ந் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.

    வாக்குப்பதிவு அக்.17 மற்றும் 19ந் தேதிகளில் நடக்கிறது. அக்.21ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து நகராட்சி தலைவர், துணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் என 20 பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் நவ.2ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் நகராட்சி உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடி தங்களது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர், துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

    பெரம்பலூர் நகராட்சியில் 41 வாக்குச்சாவடிகள், பேரூராட்சி பகுதிகளில் 60 வாக்குச்சாவடிகள், ஊரக பகுதிகளில் 632 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 733 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தேர்தல் பணிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 16 பேர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 176 பேர், வாக்குச்சாவடி அலுவலர்கள் 5 ஆயிரத்து 840 என மொத்தம் 6 ஆயிரத்து 32 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். நகர்ப்புற தேர்தலுக்கு 140 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஊரகத் தேர்தல்களுக்காக 2 ஆயிரத்து 633 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 518 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    பெரம்பலூர் நகராட்சியில் வாக்காளர்களில் ஆண்கள் 18 ஆயிரத்து 157 பேர், பெண்கள் 19 ஆயிரத்து58 பேர், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 37 ஆயிரத்து 217 பேர் உள்ளனர்.

    இதேபோல பேரூராட்சி பகுதிகளில் ஆண்கள் 18 ஆயிரத்து 758 பேர், பெண்கள் 19 ஆயிரத்து 669 பேர் என மொத்தம் 38 ஆயிரத்து 427 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதுதவிர பெரம்பலூர் மாவட்ட ஊரக பகுதிகளில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 929 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 85 ஆயிரத்து 936 பெண் வாக்காளர்கள், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 874 வாக்காளர்கள் உள்ளனர்.
    Next Story
    ×