search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் தனியார் பல்கலைக்கழகங்கள் புதிதாக அமைக்க அனுமதி: நாராயணசாமி அறிவிப்பு
    X

    புதுவையில் தனியார் பல்கலைக்கழகங்கள் புதிதாக அமைக்க அனுமதி: நாராயணசாமி அறிவிப்பு

    புதுவை மாநிலத்தில் பல தனியார் பல்கலைக்கழகங்கள் வந்தால்தான் மாணவர்கள் பயன் பெறுவர் என்பதால் இதற்கு அனுமதி வழங்க முடிவெடுத்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை சட்டசபையில் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடத்தி இறுதி முடிவெடுக்கப்பட்டது. இதன்படி விவசாயிகள் கடன் தொகை ரத்து செய்யப்படும். இதற்காக ரூ.20 கோடி செலவாகும். இதன் மூலம் 7 ஆயிரம் விவசாய குடும்பத்தினர் பயனடைவார்கள்.

    விவசாயத்திற்கு வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இந்த கோரிக்கை முக்கிய அம்சமாக இருந்து வந்தது.

    ஆட்சிக்கு வந்த 100 நாளில் விவசாயிகள் கடனை தற்போது நாங்கள் ரத்து செய்துள்ளோம். குறுகிய காலத்தில் எங்கள் அமைச்சரவை இந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளது மக்களிடையே நற்பெயரை பெற்றுத்தந்துள்ளது.

    கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடன் வாங்கியவர்கள் தங்கள் அபராத வட்டியை தள்ளுபடி செய்தால் நிலுவையில் உள்ள அசல், வட்டியை செலுத்த தயாராக உள்ளதாக கோரிக்கை வைத்தனர். இதுபற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடன் பெற்றவர்களின் அபராத வட்டி தொகை ரத்து செய்யப்படும்.

    மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி, மாநில அரசின் கருத்திற்காக அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்தும் அமைச்சரவையில் விவாதித்தோம். பள்ளி கல்வி கொள்கை, கல்லூரி கல்வி கொள்கை குறித்து பரிசீலனை செய்து புதுவை மாநிலத்திற்கு ஏற்ப அதை நடைமுறைப்படுத்த கருத்துக்கள் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுத்தோம்.

    இதன்படி சமஸ்கிருதத்தை புதுவை மாநில பள்ளிகளில் கட்டாயமாக புகுத்தக்கூடாது. குருகுல கல்வியை எப்போதும் ஏற்கமாட்டோம். தற்போதுள்ள கல்வி முறையை நாங்கள் முழுமையாக தொடர வேண்டும். சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அளிக்கப்படும் சலுகைகள் தொடர வேண்டும் என கருத்துக்கள் மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

    தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. புதுவையிலும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் வந்தால்தான் மாணவர்கள் பயன் பெறுவர் என்பதால் இதற்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பல்கலைக் கழகங்களில் புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, 60 சதவீத வேலைவாய்ப்பு அளிக்க விதிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    புதுவையில் நர்சிங் கல்லூரி, ஏ.என்.எம்., ஜி.என்.எம். படிப்புகளுக்கான கல்லூரிகள் தொடங்க காரைக்காலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் எங்களை அணுகியுள்ளது. இதுகுறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்வோம்.

    பொதுப்பணித்துறை ஊழியர்கள் எங்கள் அரசால் நியமிக்கப்படவில்லை. அவர்கள் பணி நியமன ஆணை பெறவில்லை. சிலர் போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர். சிலர் லஞ்சம் கொடுத்துள்ளனர். சிலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தேர்தலுக்கு முன் நியமிக்கப்பட்ட அவர்களை நீக்க வேண்டும் என அரசியல்கட்சிகள் அனைத்தும் தேர்தல் கமி‌ஷனுக்கு புகார் கொடுத்தனர். தேர்தல் துறை நீக்கியுள்ளது.

    அவர்களை வேலைக்கு நாங்கள் வைக்கவில்லை, நாங்கள் நீக்கவில்லை. 2 ஆயிரத்து 600 பேரை கடந்த ஆட்சியில் வைத்துள்ளனர். இவர்களுக்கான சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

    காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசம் சென்றபோது அவருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒருவர் தவறான செயலில் இறங்கினார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு பாஜக, ஆர்எஸ்எஸ் இதை செய்துள்ளது. இந்த சலசலப்புக்கு இளம் தலைவர் ராகுல்காந்தி பயப்பட மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×