search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தீக்குளித்து பலியான வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்: வைகோ-சீமான் அஞ்சலி
    X

    நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தீக்குளித்து பலியான வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்: வைகோ-சீமான் அஞ்சலி

    நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தீக்குளித்து பலியான வாலிபர் உடலுக்கு வைகோ-சீமான் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை விக்னேஷ் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மூவாநல்லூர் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
    மன்னார்குடி:

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி நடந்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

    இந்த பேரணியில் பங்கேற்ற மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் திடீரென தீக்குளித்தார். உடல் கருகிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடலுக்கு சீமான், த.வெள்ளையன், நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    நேற்று மாலை 6.30 மணிக்கு விக்னேஷ் உடல் வேன் மூலம் அவரது சொந்த ஊரான மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு விக்னேஷ் உடல் ஏற்றப்பட்ட வேன் மன்னார்குடி சென்றடைந்தது. கோபால சமுத்திரம் மேலவீதியில் உள்ள அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் பொதுமக்கள் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் போது, இளம் வயதிலேயே இந்த முடிவை விக்னேஷ் எடுத்தது வருத்தத்துக்குரியது. எங்கள் கூட்டத்தில் ஒரு தம்பி நெருப்போடு நெருப்பாகி விட்டான். இது தமிழர்களின் மீது அவர் கொண்டிருந்த அளவு கடந்த உணர்ச்சியின் காரணமாக நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் இன சமுதாய புரட்சி ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற முடிவை யாரும் எடுக்க கூடாது. இது ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதுதான் என்று தெரிவித்தார்.

    இன்று காலை விக்னேஷ் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மூவாநல்லூர் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
    Next Story
    ×