search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 26 போலி டாக்டர்கள் கைது: கலெக்டர் சுந்தரவல்லி பேட்டி
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் 26 போலி டாக்டர்கள் கைது: கலெக்டர் சுந்தரவல்லி பேட்டி

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மருத்துவமனை நடத்தி வந்த 26 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுந்தரவல்லி பேட்டியளித்துள்ளார்
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி உள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மர்ம காய்ச்சல் பாதித்ததில் காவேரிராஜபுரத்தை சேர்ந்த 4 சிறுவர்களும் பள்ளிப்பட்டு, கீரப்பாக்கத்தில் தலா ஒரு சிறுவனும், மீஞ்சூரில் ஒரு சிறுமியும் , நேற்று திருவள்ளூர் மாரப்பன் தெருவைச் சேர்ந்த செந்தில்குமாரின் 2 வயது மகன் தீபக்கும் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

    இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் இன்று முதல் வியாழகிழமை தோறும் மாவட்ட தூய்மை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி இன்று காலை திருவள்ளூர் இந்திரா காந்தி நகரில் உள்ள சுற்றுபுற பகுதியில் தூய்மை செய்வதை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டார். பின்னர் அவர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். சுகாதாரமாக இருக்குமாறு பொது மக்களை அறிவுறுத்தினார்.

    மேலும் அனைவருக்கும் நிலவேம்பு கசாயத்தையும் கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார். அப்போது கோட்டாட்சியர் ஜெயச்சந்திரன், சுகாதார துணை இயக்குனர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் செந்தில் குமரன், சுகாதார அலுவலர் மோகன் உடன் இருந்தனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளுர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் இன்று முதல் வியாழகிழமை தோறும் மாவட்ட தூய்மை நாளாக கடைப்பிடிக்கப்பட உள்ளது.

    தூய்மை நாளை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களை வைத்து தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் மூலமாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். பொதுமக்கள் அனைவரும் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கொசுக்கள் உருவாகும் புழுக்கள் உற்பத்தியாகாது.

    டெங்கு கொசு உருவாக 7 நாட்கள் வரை ஆகும். ஆகையால் வாரம் ஒருமுறை தண்ணீர் தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்தால் புழுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுக்கப்படும். மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் ஆட்டோக்கள் மூலமாக மாவட்ட தூய்மை நாள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இப்பணிகள் வீடுகள் மட்டுமின்றி தொழிற் சாலைகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் திருமண மண்டபங்கள் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடைபெறும்.

    எனவே அனைவரும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட தூய்மை நாளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு தந்து சுற்றுப் புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 26 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×