search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியதடாகம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த 12 காட்டு யானைகள்: வீடு- காரை உடைத்து துவம்சம்
    X

    பெரியதடாகம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த 12 காட்டு யானைகள்: வீடு- காரை உடைத்து துவம்சம்

    நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடு- காரை உடைத்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் துவம்சம் செய்தது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் தடாகம் அடுத்துள்ளது பெரியதடாகம். இந்த பகுதியில் நேற்று இரவு 4 காட்டுயானைக்கூட்டம் ஊருக்குள் புகுந்தது.

    அங்கு வசிக்கும் விவசாயி பெருமாள்சாமி (வயது 47) என்பவரது வீட்டுக்கு வந்த யானை கூட்டம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கியது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் துவம்சம் செய்தது.

    அதிர்ச்சியடைந்த பெருமாள்சாமி குடும்பத்தினர் சத்தம்போட்டு அலறினர். பின்னர் அருகில் உள்ள மகாலிங்கம் என்பவரது வீட்டுக்கு சென்ற யானைக்கூட்டம் வீட்டை உடைத்து அங்கிருந்த அரிசி, பருப்புகளை தின்றது. மகாலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பி வெளியே ஓடினர்.

    யானைக்கூட்டம் ஊருக்குள் நுழைந்த தகவல் கிடைத்ததும் பொதுமக்கள் சத்தம்போட்டும் தீ பந்தங்களை ஏந்தியும் யானைகளை விரட்ட முயன்றனர். அந்த சமயத்தில் மற்றொரு 8 யானைகள் ஊருக்குள் புகுந்தன. விடியவிடிய 12 காட்டு யானைகளை பொதுமக்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதிகாலையில் தான் 2 யானைக்கூட்டமும் வனப்பகுதிக்கு சென்றன. இதனால் பொதுமக்கள் விடியவிடிய தூக்கமின்றி தவித்தனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது பெரியதடாகம், வீரபாண்டி ஊராட்சி, ஆனைகட்டி செல்லும் சாலைகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் யானைகள் ஊருக்குள் நுழைவதும், அது எங்கே நிற்கிறது என்பது கூட தெரியவில்லை.

    இங்கு பெரும்பாலானோர் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறோம். கடினமான வேலை செய்யும் பொதுமக்கள் யானைகளின் அச்சுறுத்தலால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. வனத்துறையினரும், மின் வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×