search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூரில் உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி: தமிழகத்தில் நக்சலைட் ஆதிக்கம் இல்லை முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் பேச்சு
    X

    திருப்பத்தூரில் உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி: தமிழகத்தில் நக்சலைட் ஆதிக்கம் இல்லை முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் பேச்சு

    திருப்பத்தூரில் உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் 1978-ம் ஆண்டு நக்சலைட் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்க தொடங்கியது.

    முதல் பலியாக 1978-ம் ஆண்டு திருப்பத்தூர் அருகே உள்ள மத்தூர் பகுதியை சேர்ந்த அப்பாசாமி ரெட்டியார் கொல்லப்பட்டார்.அப்போது தமிழ்வாணன் தலைமையில் சிவலிங்கம் என்ற அன்பு, இவரது உறவினர் மகாலிங்கம், நொண்டி பழனி உள்ளிட்ட நக்சலைட்டுகள் அழித்தொழிப்பு கொள்கைக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந்தேதி அதிகாலை திருப்பத்தூர் அருகே ஏலகிரி கிராமத்தில் சுற்றித்திரிந்த தமிழ்வாணன், சிவலிங்கம் உள்ளிட்ட நக்சலைட்டுகளை இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி பிடித்தார்.

    திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வைத்து இவர்களிடம் விசாரித்த போது சிக்கியவர்களில் ஒருவர் நக்சலைட்களின் முக்கிய புள்ளி சிவலிங்கம் என்பதை உறுதி செய்தார்.

    அப்போதைய வேலூர் சரக டி.ஐ.ஜி. வால்டர் தேவாரத்திடம் உத்தரவுகளை பெற்று கொண்டு நக்சலைட்டுகளை ஒரு காரில் ஏற்றி கொண்டு புறப்பட்டார். அந்த கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுக்கு நூறாக வெடித்து சிதறியது. காரில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, காவலர்கள் முருகேசன், ஏசுதாஸ் ஆகியோருடன் நக்சலைட்டுகள் 2 பேர் இறந்தனர்.

    மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வீசிவிட்டு நக்சலைட் சிவலிங்கம் மட்டும் தப்பினார்.

    நக்சலைட் தாக்குதலில் உயிர் நீத்த போலீசாருக்கு திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6-ந்தேதி நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்படி, 36-வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை திருப்பத்தூரில் நடந்தது.

    அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன், தமிழக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. தேவாரம், கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி செலுத்தினர். சோக கீதம் இசைக்கப்பட்டது.

    ஓய்வு பெற்ற டி.ஜி.பி. தேவாரம் பேசியதாவது:-

    இந்தியாவில் இது போன்ற உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செப்டம்பர் 22-ந்தேதி பொதுவான நாளாக கருதி அனைத்து இடங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு தனியாக நினைவு அஞ்சலி செலுத்துவது இங்குதான் நடைபெறுகிறது.

    திருப்பத்தூரில் நக்சலைட்டுகள் ஆதிக்கத்தின் போது மாலை 6 மணி ஆகிவிட்டால் கடைகள் மூடப்பட்டு விடும். திருப்பத்தூர் பகுதியே இருளில் மூழ்கி இருக்கும். பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு அஞ்சுவார்கள்.

    தற்போது தமிழகத்தில் நக்சலைட் ஆதிக்கம் இல்லை. ஒடுக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. அங்கு ஆண்டிற்கு 300-க்கும் மேற்பட்டோர் நக்சலைட்டுகளால் கொல்லப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஐ.ஜி.செந்தாமரைக் கண்ணன், டி.ஐ.ஜி. தமிழ் சந்திரன், எஸ்.பி. பகலவன், டி.எஸ்.பிக்கள் சுப்பிரமணியம், சுந்தரம், நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் லீலா சுப்பிரமணியம், நகர மன்ற தலைவர் அரசு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமேஷ், டி.கே. ராஜா, அன்பழகன், நகர பாசறை தலைவர் டி.டி.சங்கர், நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை தலைவர் கணேஷ்மல், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற எஸ்.பி. அசோக்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன், என்ஜினீயர் தயா சேகர், ரமேஷ், மற்றும் போலீஸ் அதிகாரிகள், பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×