search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தம்பியுடன் ஏற்பட்ட தகராறை தடுத்ததால் கீழே தள்ளினேன்: ஆசிரியை கொலை வழக்கில் கணவர் வாக்குமூலம்
    X

    தம்பியுடன் ஏற்பட்ட தகராறை தடுத்ததால் கீழே தள்ளினேன்: ஆசிரியை கொலை வழக்கில் கணவர் வாக்குமூலம்

    நாகர்கோவிலில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறை தடுத்ததால் கீழே தள்ளினேன் என்று ஆசிரியை கொலையில் கைதான கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழராமன் புதூரைச் சேர்ந்தவர் ஜெபாஸ்டின் ஆண்டனி. இவரது மகள் அஜிதா ஜோஸ் (வயது33). ஆசிரியையாக இருந்தார். இவருக்கும் நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஆண்டனி ராஜேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அஜிதா உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அவரது கணவர் ஆண்டனி ராஜேஷ்குமார் கீழராமன் புதூரில் உள்ள பெற்றோர் வீட்டில் கொண்டு வந்துவிட்டார். இதையடுத்து அஜிதாவை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி அஜிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அஜிதாவின் தந்தை ஜெபாஸ்டின் ஆண்டனி பணகுடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், தனது மகள் அஜிதா ஜோசை கணவர் ஆண்டனி ராஜேஷ் அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி இருந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் வழக்குப்பதிவு செய்தார். ஆண்டனி ராஜேஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆண்டனி ராஜேஷ்குமார் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் எனது தம்பிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது எனது மனைவி அஜிதா தகராறை விலக்கி விட வந்தார். நான் ஆத்திரத்தில் எனது சகோதரரை காலால் மிதிக்க சென்றேன். எனது மனைவி திடீரென குறுக்கே வந்து விட்டார். இதனால் தவறி அவரது வயிற்றில் மிதித்து விட்டேன். அவர் கீழே தடுமாறி விழுந்தார். அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் ஆண்டனி ராஜேஷ்குமாரை வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். பாளை ஜெயிலில் ஆண்டனி ராஜேஷ்குமார் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையில பலியான அஜிதாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது. அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர். அஜிதாவுக்கு திருமணமாகி 3 வருடமே ஆவதால் அவர் சாவு குறித்து நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    Next Story
    ×