search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைக்கில் சென்றவரிடம் செயின் பறிப்பு: கொள்ளையர்களுடன் போராடிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி
    X

    பைக்கில் சென்றவரிடம் செயின் பறிப்பு: கொள்ளையர்களுடன் போராடிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி

    வேலூரில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது செயின் பறிப்பு கொள்ளையர்களுடன் போராடிய பெண் சப்–இன்ஸ்பெக்டர் 3 மாதத்திற்கு பிறகு மரணம் அடைந்தார்.
    வேலூர்:

    வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் செல்வம்பாள் (வயது 40). கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த ஏப்ரல் 11-ம் தேதி செல்வாம்பாள் உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாய் கனகம்மாளை பார்க்க அணைக்கட்டு அடுத்த இறைவன்காடு கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பைக்கில் மர்மநபர்கள் 2 பேர் பின்தொடர்ந்து சென்றனர்.

    வல்லண்டராமம் அருகே சென்றபோது திடீரென பைக்கில் வந்த மர்மநபர்கள் சப்-இன்ஸ்பெக்டர் செல்வாம்பாள் பைக் மீது மோதி அவரை கீழே தள்ளினர். பின்னர், மர்மநபர்களில் ஒருவன் செல்வாம்பாள் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் செயினை பறிக்க முயற்சி செய்தான். சுதாரித்த செல்வாம்பாள் கொள்ளையர்களை எதிர்த்து போராடியபடி கூச்சலிட்டார்.

    அப்போது, செல்வாம்பாளுக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே கைகலப்பும் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் செல்வாம்பாள் மார்பு மற்றும் முதுகு பகுதியில் பலமாக தாக்கினர்.

    செல்வாம்பாள் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர் பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த கொள்ளையர்கள் செல்வாம்பாள் கழுத்தில் கிடந்த செயினை வேகமாக பிடித்து இழுத்தனர். இதில் பாதி செயின் அறுந்து கொள்ளையர்கள் கையில் சிக்கியது.

    அறுந்த செயினுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றனர். கொள்ளையர்கள் வேகமாக செயினை பிடித்து இழுத்ததால் கழுத்தில் செல்வாம்பாளுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இரும்பு கம்பியால் தாக்கபட்டிருந்ததாலும் காயமடைந்த செல்வாம்பாள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதில் கழுத்தில் நரம்பு பாதிக்கப்பட்டதுடன், வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதால் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவரது உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது.

    இதனால் வேலூரில் உள்ள தனியார் மருந்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 மாதத்திற்கு பிறகு கடந்த 3-ம் தேதி இரவு செல்வாம்பாள் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு செயினை பறிகொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் செம்வாம்பாள் கொடுத்த புகாரின் மீது இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் அவரது உறவினர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில்:-

    செல்வாம்பாள் வழிப்பறி கொள்ளையர்களால் தள்ளிவிடப்பட்டார். இதில் அவரது கைகளில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டன. அது சரியான பிறகு தொடர்ந்து 2 மாதங்கள் பணிக்கு வந்தார்.

    ஏற்கனவே அவருக்கு நோய் பாதிப்பு இருந்துள்ளது. அதனை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    அவர் நோய் பாதிப்பால் இறந்ததாக டாக்டர்கள் சான்று அளித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் நாங்கள் எதையும் மறைக்க வேண்டியதில்லை. வழிப்பறி திருடர்கள் தாக்கியதில் செல்வாம்பாள் இறந்திருந்தால் நாங்களே நேரடியாக கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×