search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி முன்பதிவு டிக்கெட் ஒருசில நிமிடங்களில் விற்று தீர்ந்தன: தென்மாவட்ட ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பின
    X

    தீபாவளி முன்பதிவு டிக்கெட் ஒருசில நிமிடங்களில் விற்று தீர்ந்தன: தென்மாவட்ட ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பின

    சென்னையில் இன்று காலை 8 மணிக்கு தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கியது. ஒருசில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 29-ந்தேதி வருகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்கள் ரெயிலில் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

    120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 27-ந்தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    முன்பதிவு செய்வதற்கு சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட பல ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்து இருந்தனர். முன்பு போல நீண்ட வரிசை காணப்படவில்லை. பெரும்பாலனவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வதால் முன்பதிவு மையங்களுக்கு வருவது இல்லை.

    காலை 8 மணிக்கு தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கியது. ஒருசில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

    அடுத்த 10 நிமிடங்களில் காத்திருப்போர் பட்டியல் வந்தது. அதனையடுத்து சில நிமிடங்களில் காத்திருப்போர் எண்ணிக்கையும் நீண்டது. 100, 200, 300, 400 என காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து சென்றது.

    வைகை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் இடமில்லை.

    குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ரெயிலில் 27-ந்தேதி பகலில் பயணம் செய்ய இடங்கள் காலியாக இருக்கின்றன. காலை 10 மணி நிலவரப்படி 2-ம் வகுப்பு படுக்கை வசதி 145 இடங்களும், உட்காரும் இருக்கை 236 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை 49 இடங்களும் உள்ளன.

    திருச்செந்தூர் (16105) எக்ஸ்பிரசில் 3 அடுக்கு ஏ.சி. 21 இடங்களும், 2-ம் வகுப்பு படுக்கை வசதி 29 இடங்களும் காலியாக உள்ளன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் (12633) அனைத்து வகுப்புகளும் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் உள்ளது. இந்த ரெயிலில் நெல்லைக்கு 3 அடுக்கு ஏ.சி. 9 இடங்களும், 2-ம் வகுப்பு படுக்கை 99 இடங்கள் காத்திருப்போர் பட்டியலாக உள்ளது. கன்னியாகுமரிக்கு 67 இடங்கள் காத்திருப்போர் பட்டியலாக நீடிக்கிறது.

    நெல்லை எக்ஸ்பிரசில் (12631) 3 அடுக்கு ஏ.சி. படுக்கை 38 இடங்கள், 2-ம் வகுப்பு படுக்கை வசதி 231 இடங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

    செங்கோட்டை செல்லும் பொதிகை (12661) எக்ஸ்பிரசில் 3 அடுக்கு ஏ.சி. படுக்கை 61 பேர், 2-ம் வகுப்பு படுக்கை 338 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரசில் (16723) 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை 15 பேர், 2-ம் வகுப்பு படுக்கை வசதி 134 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

    27-ந்தேதி நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயிலில் (12667) 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை 31 இடங்கள் இருக்கின்றன. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி 135 பேர் காத்திருப்பில் உள்ளனர்.

    மதுரை பாண்டியன் எக்ஸ்பிரசில் (12637) 2-ம் வகுப்பு படுக்கை வசதி 401 பேரும், 3 அடுக்கு ஏ.சி. படுக்கை வசதி 85 பேரும் காத்திருப்போராக உள்ளனர்.

    தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரசில் (12693) 2-ம் வகுப்பு படுக்கை வசதி காத்திருப்போர் எண்ணிக்கை 128 ஆகவும், 3 அடுக்கு ஏ.சி. படுக்கை வசதியில் 11 பேர் காத்திருப்போராகவும் உள்ளனர்.

    இதேபோல் சேலம், ஈரோடு, கோவை மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி வருகிறது.
    Next Story
    ×