search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 7 இடங்களில் அம்மா வாரச்சந்தை அடுத்த வாரம் திறப்பு
    X

    சென்னையில் 7 இடங்களில் அம்மா வாரச்சந்தை அடுத்த வாரம் திறப்பு

    சென்னையில் மலிவு விலையில் அனைத்து பொருட்களையும் வழங்க மாநகராட்சி சார்பில் 7 இடங்களில் அம்மா வாரச்சந்தை அடுத்த வாரம் திறக்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் அத்தியாவசிய தேவையான பொருட்கள் ஆனாலும் அழகு சாதன பொருட்களாக இருந்தாலும் அதன் விலை கடைக்கு கடை வித்தியாசப்படும்.

    சாதாராண கடைகளில் ஒரு விலையும், சூப்பர் மார்க்கெட் கடைகளில் சிறிது அதிக விலையிலும், ‘மால்’களில் சற்று ஏற்ற இறக்கத்துடன் பொருட்கள் விற்கப்படுகிறது.

    இதில் ஏழைகளால் வாங்க முடியாத அளவுக்கு சில பொருட்களின் விலைகளும் உள்ளன.

    இதை கருத்தில் கொண்டு அனைத்து விதமான பொருட்களையும் மலிவு விலையில் வழங்க மாநகராட்சி சார்பில் அம்மா வாரச்சந்தை திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதன்படி நாள் ஒன்றுக்கு 1 இடம் வீதம் வாரம் முழுவதும் 7 இடங்களில் அம்மா வாரச்சந்தை திறக்கப்பட உள்ளது.

    முதற்கட்டமாக அரும்பாக்கம் பசுமை தீர்ப்பாய அலுவலகம் அருகில் அம்மா வாரச்சந்தை அடுத்த வாரம் திறக்கப்படுகிறது. மேலும் மின்ட் மேம்பாலம் அருகிலும், கோட்டூர்புரம், பட்டினப்பாக்கம் பகுதி உள்பட 7 இடங்களில் விரைவில் இவை திறக்கப்படுகிறது.

    ஒவ்வொரு சந்தையிலும் 200 கடைகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கடைக்கும் 100 சதுர அடி இடம் கொடுக்கப்படுகிறது. மின் விளக்கு, மின்விசிறி வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.

    சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த கடைகள் அமைக்கப்படுகின்றன. அம்மா வாரச்சந்தையில் காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள், மாவு வகைகள், சமையல் பாத்திரங்கள், அழகு சாதன பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கோழி, ஆடு, மீன் கடைகளும் இங்கு இடம்பெறுகிறது.

    ஒரு பகுதியில் கிராமிய கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு மக்களை கவரும் வகையில் சந்தையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் நேரடியாக பொருட்களை இங்கு வந்து விற்பனை செய்யலாம். இதே போல் அழகு சாதன பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும் அடக்க விலையை விட குறைந்த விலையில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அம்மா வாரச்சந்தையை வார்டுக்கு ஒரு சந்தை என படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×