search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் புதுவை வந்தார்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றத்துக்கு ஆளாக்கி உள்ளது வேதனை அளிக்கிறது. முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது. அதில் அதிக பெரும்பான்மை பெறவில்லை. சமநிலையை தான் அடைந்தது.

    அதன் பின்னர் ஒரு மாதம் வரை முதல்-அமைச்சரை தேர்வு செய்து பதவி ஏற்பதில் இழுபறி நிலவியது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத ஒருவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி முதல்வராக நியமித்துள்ளார்.

    இதனால் வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. இது அரசியலில் ஸ்திரமற்ற தன்மையை காட்டுகிறது. இதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ரெயில் நிலையம் மத்திய அரசின் கீழ் இருந்தாலும், அதன் புறப்பகுதிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    எனவே, அங்கு நடைபெறும் குற்றச்சம்பவங்கள் அனைத்தும் மாநில அரசை சார்ந்துள்ளது. சுவாதி கொலை குற்றவாளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை மாநில அரசு உருவாக்க வேண்டும். எல்லா துறையைச் சேர்ந்தவர்களும் பெண்கள் தொடர்பாக வரும் புகார்களை ரகசியம் காத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் புகார்களின் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
    Next Story
    ×