search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் 18-ந்தேதிக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு
    X

    நீலகிரி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் 18-ந்தேதிக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு

    நீலகிரி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கை வருகிற 18-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கலெக்டர் சங்கர் அறிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த மே மாதம் 16-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் 19-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 10 பேரும், குன்னூரில் 13 பேரும், கூடலூர் (தனி) தொகுதியில் 8 பேரும் போட்டியிட்டனர்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியிடப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதன்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் செலவு கணக்கு தொடர்பான ஒத்திசைவு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு தேர்தல் செலவின பார்வையாளர் அஜய் மாலிக் முன்னிலை வகித்தார். இதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி செலவின பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சங்கர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வருகிற 18-ந்தேதிக்குள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை முழுவடிவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.
    Next Story
    ×