search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
    X

    கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

    2016 தேர்தலுக்குப்பின்னர் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நாளை தொடங்குகிறது.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜெயலலிதா 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

    இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கடந்த 25-ந்தேதி பதவி ஏற்றனர். அதன்பிறகு கடந்த 3-ந் தேதி நடந்த கூட்டத்தில் சபாநாயகராக தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் 15-வது சட்டசபையின் முதல் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. நாளைய கூட்டத்தில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இதற்காக அவர் நாளை காலை 10.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்படுவார். 10.50 மணிக்கு அவர் தலைமைச் செயலகம் வந்து சேர்வார்.

    அவரை சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் இவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டசபைக்குள் அழைத்துச் செல்வார்கள். இதைத் தொடர்ந்து 11 மணிக்கு கவர்னர் உரையை ரோசய்யா வாசிப்பார்.

    கவர்னர் ரோசய்யா உரையாற்றி முடித்ததும் அதன் தமிழாக்கக்தை சபாநாயகர் தனபால் வாசிப்பார். கவர்னர் உரையில் முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியேற்றதும் முதல் கையெழுத்திட்டார்.

    அதுபோன்று தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளது.

    கவர்னர் உரையுடன் நாளைய கூட்டம் நிறைவு பெறும். அதன்பிறகு சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும்.

    அந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும். எனவே சட்டசபை எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்ற முழு விபரம் நாளை பிற்பகல் தெரியவரும்.

    தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்த காரணத்தால் இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.

    எனவே விரைவில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். எந்த தேதியில் பட்ஜெட் தாக்கலாகும் என்ற விபரம் நாளை தெரியும்.

    நாளை மறுநாள் கவர்னர் உரை மீதான விவாதம் தொடங்கும். அனைத்து கட்சி பிரதிநிதிகளும் அதில் பங்கேற்று பேசுவார்கள்.

    இந்த கூட்டத்தொடர் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×