search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூரில் விக் தயாரிக்கும் நிறுவனத்தில் தலைமுடியை திருடிய 3 வாலிபர்கள் கைது
    X

    கொடுங்கையூரில் விக் தயாரிக்கும் நிறுவனத்தில் தலைமுடியை திருடிய 3 வாலிபர்கள் கைது

    கொடுங்கையூரில் விக் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தலைமுடியை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
    பெரம்பூர்:

    கொடுங்கையூரை சேர்ந்தவர் பரமசிவம். இவர் அதே பகுதியில் ‘விக்’ தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பெனிக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி ‘விக்’ தயாரிக்க வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள தலைமுடிகளை அள்ளிச் சென்று விட்டனர்.

    இது குறித்து கொடுங்கையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கோயம்பேடை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் அரும் பாக்கத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், மதுரவாயல் சரவணன், வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியை சேர்ந்த மதன் ஆகியோர் தலைமுடியை திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    அவர்களில் ஆட்டோ டிரைவர் செந்தில்குமார், சரவணன், மதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூட்டை மூட்டையாக தலைமுடி பறிமுதல் செய்யப்பட்டது.

    ரவுடிகளான ராதா கிருஷ்ணனும், ராம கிருஷ்ணனும் தப்பி சென்று விட்டனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கைதான 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

    ஆட்டோ டிரைவரான செந்தில்குமாருக்கு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் ‘விக்’ சம்பந்தமாக தொழில் செய்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

    இதனை அறிந்த ரவுடிகளான ராதாகிருஷ்ணனும், ராமகிருஷ்ணனும் அவரை மிரட்டி பணம் பறித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியாத செந்தில்குமார் அவர்களிடம் இருந்து தப்பித்து மாதவரம் ரெட்டேரியில் தங்கினார்.

    அங்கும் சென்ற ரவுடி கும்பல் செந்தில்குமாரை மிரட்டி ‘விக்’ தொழிலில் கிடைக்கும் வருமானம் குறித்து கேட்டு அறிந்தனர். பின்னர் அவரையும் கூட்டு சேர்த்து பரமசிவத்தின் ‘விக்’ தயாரிக்கும் நிறுவனத்தில் தலைமுடியை திருடியது விசாரணையில் தெரிந்தது.

    தலைமறைவான ரவுடிகள் ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது.


    Next Story
    ×