search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தும் குழு அமைக்க நடவடிக்கை - மத்திய மந்திரி பேட்டி
    X

    வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தும் குழு அமைக்க நடவடிக்கை - மத்திய மந்திரி பேட்டி

    தமிழகத்தில் வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தும் குழு அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக மத்திய மந்திரி ராதா மோகன் சிங் கூறினார்.
    சென்னை :

    தமிழகத்தில் வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தும் குழு அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக மத்திய மந்திரி ராதா மோகன் சிங் கூறினார்.

    மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி ராதா மோகன் சிங், டெல்லியில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் மையம் அலுவலகத்தில் இருந்து நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்த பேட்டியில், சென்னை, நாக்பூர், பாட்னா, அகமதாபாத், கொல்கத்தா, சண்டிகர், லக்னோ, ஷில்லாங், கான்பூர், ஜெய்ப்பூர், போபால் ஆகிய நகரங்களில் இருந்து பத்திரிகை நிருபர்கள் பங்கேற்றனர்.

    மத்திய மந்திரி ராதா மோகன் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தும் குழு அமைக்க 17 மாநிலங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பேசினோம். தற்போது மீண்டும் விரிவாக பேச உள்ளோம். தமிழக அரசும் வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தும் குழு அமைக்க ஒத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்.

    வறட்சியின் காரணமாக உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படவில்லை. மரபணு மாற்ற பயிர்கள் வந்துகொண்டிருக்கின்றன. நாங்கள் புதிய தொழில்நுட்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல. புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் தான் உணவு உற்பத்தி அதிகரிக்கும்.

    ஆனால், மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு ஆய்வு செய்து எந்தெந்த பயிர்களுக்கு அனுமதி அளிக்கிறதோ, அந்த மரபணு பயிர்களை அனுமதிக்க தயாராக இருக்கிறோம்.

    தேசிய அளவில் உணவு பொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சியாக 200 இடங்களில் உள்ள தேசிய வேளாண் விளை பொருள் சந்தைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்கப்படும். அடுத்த ஆண்டு (2017) இறுதிக்குள் 500 இடங்களில் உள்ள தேசிய வேளாண் விளை பொருள் சந்தைகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    உணவு பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் தான் உற்பத்தி குறைவாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இடுபொருட்களின் விலை ஏற்றம், பெரிய அளவுக்கு சந்தைப்படுத்த முடியாத நிலை, கணிக்க முடியாத வானிலை போன்றவைதான் அதற்கு காரணம்.

    ஏற்கனவே, நெல், கோதுமை, நிலக்கடலை, உளுந்து, மிளகாய், பருத்தி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்பட 25 உணவு பொருட்கள் தேசிய விவசாய சந்தையில் விற்கப்படும் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்திலும் இதை நடைமுறைக்கு கொண்டுவர பேச்சு வார்த்தை நடக்கிறது.

    உணவு கிடங்குகளை அமைக்க நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக பெரிய அளவிலான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வந்துள்ள தகவல் மிகவும் வருந்தத்தக்கது. மராட்டிய மாநிலம் விதர்பா என்னும் இடத்தில் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வறட்சியான பகுதியான அங்கு, நுண்ணீர் பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரிவான செயல்திட்டங்கள் மாநில அரசு உதவியுடன் வகுக்கப்பட்டு வருகிறது.

    குஜராத் முதல்-மந்திரியாக பிரதமர் நரேந்திர மோடி இருந்தபோது அங்கு நுண்ணீர் பாசன திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு போதிய அளவு விலை கிடைக்கும். இதனால், விவசாயிகள் தற்கொலை குறையும். விவசாயிகள் தற்கொலையை கருத்தில் கொண்டுதான் பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தற்போது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பருவ நிலை மாற்றம், பருவ மழை போன்றவற்றை 95 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணக்கிட முடிகிறது. இதுபோன்ற தகவல்களை மாநில வாரியாக விவசாயிகளுக்கு தெரிவிக்க வழிவகை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×