search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு: ரூ.570 கோடியுடன் சிக்கிய கண்டெய்னர் லாரியை விடுவிப்பதில் தாமதம்
    X

    திருப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு: ரூ.570 கோடியுடன் சிக்கிய கண்டெய்னர் லாரியை விடுவிப்பதில் தாமதம்

    திருப்பூரில் ரூ.570 கோடியுடன் சிக்கிய கண்டெய்னர் லாரியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து லாரியை கோவைக்கு கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் கடந்த 13–ந்தேதி நள்ளிரவு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது செங்கப்பள்ளி பகுதியில் வைத்து 3 கண்டெய்னர் லாரிகளை மடக்கினர்.

    விசாரணையில் அதில் ரூ.570 கோடி பணம் இருப்பது தெரியவந்தது. கண்டெய்னர் லாரியை தொடர்ந்து 3 சொகுசு கார்களில் வந்தவர்கள் பணம் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு சொந்தமானது என்றும், கோவையில் இருந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    ஆனால் இதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ. 570 கோடியுடன் கண்டெய்னர் லாரிகள் மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    கண்டெய்னர் லாரியை சுற்றியும் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த பணம் குறித்து விசாரணை நடத்த திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி ஒரு குழு அமைத்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் அது வங்கிக்கு சொந்தமானது என்று அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர் அனுமதி கொடுத்ததும் கண்டெய்னர் லாரிகள் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் பணத்தை விடுவிப்பத்தில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் பணத்துடன் நிற்கும் 3 கண்டெய்னர்களை கோவைக்கு கொண்டு சென்று பணத்தை எண்ண முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
    Next Story
    ×