search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் பா.ம.க.ஒன்றிய செயலாளரை பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயற்சி
    X

    கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் பா.ம.க.ஒன்றிய செயலாளரை பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயற்சி

    கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் பா.ம.க.ஒன்றிய செயலாளரை கொலை செய்யும் நோக்கத்தில் கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

    காவேரிப்பட்டினம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஒன்றிய பா.ம.க. செயலாளராக இருந்து வருபவர் பரசுராமன் (வயது 45). கிருஷ்ணகிரி தொகுதி பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்றிரவு தேர்தல் பணிகளை முடித்த அவர் காவேரிபட்டினம் அருகே உள்ள வீட்டுக்கு காரில் புறப்பட்டார்.கார் சேலம்-கிருஷ்ணகிரி பை–பாஸ் சாலையில் காவேரிப்பட்டினம் அருகே உள்ள மலையாந்தள்ளி கிராமம் அருகே பாலப் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது காரை பின் தொடர்ந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் வருவதை பரசுராமன் பார்த்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் காரில் இருந்து இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேரும் தூரத்தில் நின்றிருந்தனர். இதையடுத்து காரில் ஏறிய பரசுராமன் மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார்.

    கார் கிளம்பியதும் அந்த மர்ம நபர்கள் பரசுராமனை கொலை செய்யும் நோக்கத்தில் கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் கார் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரசுராமன் உயிர் பிழைக்க காரில் இருந்து இறங்கி அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் ஓடினார்.

    அந்த மர்ம நபர்கள் பரசுராமனை விடாமல் துரத்தினர். சிறிது தூரம் ஒடியதும் பரசுராமன் மீண்டும் ஓட முடியாமல் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த பரசுராமனை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காவேரிப்பட்டினம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தேர்தல் முன் விரோதம் காரணமாக? பரசுராமனை அந்த மர்ம நபர்கள் கொல்ல முயன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×