search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரியில் வாக்குப்பதிவு சூடுபிடித்தது: காலை 11 மணி நிலவரப்படி 27.51 சதவீதம் வாக்குகள் பதிவு
    X

    புதுச்சேரியில் வாக்குப்பதிவு சூடுபிடித்தது: காலை 11 மணி நிலவரப்படி 27.51 சதவீதம் வாக்குகள் பதிவு

    புதுவை சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 27.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., மக்கள் நல கூட்டணி என 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகளும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 22–ந் தேதி தொடங்கியது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மே 2–ந் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி புதுவையில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 344 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 9 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 47ஆயிரத்து 444. பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 94 ஆயிரத்து 412. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 79.

    30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்காக 930 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கென தனியாக 17 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் 5 ஆயிரத்து 382 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர் சில வாக்குச்சாவடிகளில் கணிசமான கூட்டத்தை காண முடியவில்லை. வாக்குப்பதிவு சற்று மந்தமாக உள்ளதாகவே காணப்படுகிறது. வாக்குப்பதிவு தொடங்கி முதல் இரண்டு மணி நேரத்தில் 10.34 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. எனினும், போகப்போக வாக்குப்பதிவு சூடுபிடிக்கலாம் என இங்குள்ள பிரதான அரசியல் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    அதற்கேற்ப, காலை 11 மணி நிலவரப்படி புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 27.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக புதுவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×